Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு கோவின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் அல்ல என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மற்றும் மே 2021-க்கான கொரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியிருப்பதாக அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி அரசு வெளியிட்டுள்ள கொரோனா மரண எண்ணிக்கையை விட உண்மை எண்ணிக்கை 13.7 மடங்கு அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளது.
நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு மு க ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளைச் செய்வதற்கும் ஒரு குழுவை அமைத்திட வேண்டுமென விழுப்புரம் எம்.பி, ரவிக்குமார், முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,805 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,25,215 ஆக சரிந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து முழுமையகாக் குணமடைந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும் என இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.64 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 378-ஆக குறைந்துள்ளது.
நாடுமுழுவதும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பீடுகள் முறைகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.