எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் நிலநடுக்கம் வரலாம்: காரணத்துடன் எச்சரிக்கும் ஆய்வாளர்கள்...!
பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு தட்டுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தட்டு வருடத்திற்கு சுமார் 5 செ.மீ நகர்கிறது
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பெரும் பூகம்பம் இந்த ஆண்டின் பேரழிவாகக் கருதப்படுகிறது. அது இதுவரை 47,000 உயிர்களைப் பறித்துள்ளது மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது.
மக்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் வீடுகளை இழந்து வருந்தும் காட்சிகள் மனதைப் பதபதைக்கச் செய்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாக மற்றொரு பூகம்பம் நிகழ்வது எப்போதுமே வாடிக்கை என்கிற நிலையில் மற்றொரு பூகம்பம் நிகழுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதை அடுத்து நிபுணர்களின் கூற்றுப்படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் தாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
"பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு தட்டுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தட்டு வருடத்திற்கு சுமார் 5 செ.மீ நகர்கிறது. இதனால் இமயமலையில் அழுத்தம் குவிந்து அதிக நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது" என்று என்ஜிஆர்ஐயின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ் செய்தி இதுகுறித்துப் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “உத்தரகாண்டில் 18 நில அதிர்வு ஆய்வு மையங்களின் வலுவான நெட்வொர்க்கிங் எங்களிடம் உள்ளது. இமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்கு பகுதி உட்பட உத்தரகாண்ட் இடையே நில அதிர்வு இடைவெளி என்று குறிப்பிடப்படும் பகுதி எந்த நேரத்திலும் நிலநடுக்கங்களுக்கு ஆளாக நேரலாம்” என்கிறார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய ராவ், "உத்தரகாண்ட் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் தவிர்க்க முடியாதது, ஏனெனில் மேற்பரப்புக்கு அடியில் நிறைய மன் அழுத்தம் உருவாகிறது. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்படும் தேதி அல்லது நேரத்தை யாராலும் கணிக்க முடியாது" என்று கூறினார்.
பேரழிவின் அளவானது அதன் புவியியல் பகுதி, மக்கள் தொகை, கட்டுமானத் தரம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது. துருக்கியில் நேர்ந்தது போன்ற நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் சரியான தேதி மற்றும் நேரத்தை கணிக்க முடியாது என்றும் ராவ் கூறினார்.
நில அதிர்வு இடைவெளி என்று அழைக்கப்படும் பகுதிக்கு மேல் பகுதி விழுந்தாலும், பூமிக்கு அடியில் உள்ள பகுதி அதிக பதற்றத்தை குவிக்கிறது. பூகம்பத்தின் மூலம் மட்டுமே பூமியில் ஏற்படும் அந்தப் பதற்றத்தை தனிக்க முடியும் என்கிறார் அவர்.
இமயமலையில் மற்றொரு நிலநடுக்கம்?
கடந்த ஆண்டு, இமயமலைப் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தது நினைவிருக்கலாம். துருக்கி நடுக்கமே இந்தியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் அது போன்றதொரு நிலநடுக்கம் ஏற்படும் எனக் கணித்திருப்பது அதுவும் இமயமலையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒட்டியே இது நிகழும் எனத் தொடர்ச்சியாகக் கணிப்பது பெரும் பதட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.