Lawrence Bishnoi: லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1,11,11,111! போலீசுக்கே பரிசு அறிவித்தது யார்?
Lawrence Bishnoi Encounter: லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் மூலமாக கொலை செய்யும் போலீசாருக்கு ரூபாய் 1 கோடி வரை பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று சத்ரிய கர்ணி சேனா என்ற இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமாக திகழ்ந்த பாபா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவரது கொலை ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்ட்ராவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பின்னணியில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக தகவல் வெளியாகியது. சல்மான் கானை கொலை செய்ய முயற்சித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ரவுடி பிஷ்னோய் மீது ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வட இந்தியாவில் பிரபலமான ராஜ்புத் இன மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுக்தேவ்சிங் கோகமெதி. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர் அவரது வீட்டில் இருந்தபோதே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சத்ரிய கர்ணி சேனா தலைவர் ராஜ் ஷெகாவத் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுண்டர் மூலம் கொலை செய்யும் போலீசாருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது, லாரன்ஸ் பிஷ்னோய்க்கு ரூபாய் 1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை வீடியோவாக அறிவித்து அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ்புத் இன தலைவர் சுக்தேவ் கோகமெதி கொலைக்குப் பழிவாங்கும் விதமாக இந்த பரிசுத்தொகையைத் தருவதாக அவர் அறிவித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறைச்சாலையில் உள்ளார். கடத்தல் மற்றும் போதைப்பொருட்களுடன் நாட்டின் எல்லையை கடக்க முயன்ற குற்றச்சாட்டிற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரது திட்டமிடலின்படியே வெளியில் பல கொலைகள் அரங்கேறி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும் தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சல்மான் கானின் உயிருக்கு இவரது கும்பலால் தொடர்ந்து ஆபத்து இருப்பதால் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பாபா சித்திக் கொலைக்கு பிறகு சல்மான்கானுக்கு பன்மடங்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையேதான் அவர் பிக்பாஸ் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார்.