CAG's Shocking Report: மதுபானக் கொள்கையால இத்தனை ஆயிரம் கோடி கோவிந்தா.? அதிர்ச்சி தரும் டெல்லி ரிப்போர்ட்...
CAG's Shocking Report: டெல்லியில், அரசின் மதுபானக் கொள்கையில் நடைபெற்ற ஊழலால், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த, சிஏஜி-யின் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

டெல்லியில், மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டது தெரிந்த விஷயம்தான். இந்த முறைகேட்டால், அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த சிஏஜி, அதாவது தலைமை கணக்கு தணிக்கையாளரின் அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்த ரேகா குப்தா
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்து, பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்த 14 சிஏஜி அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என புதிய பாஜக அரசு தெரிவித்தது. அதன் அடிப்படையில், டெல்லியில் நேற்று நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளில், டெல்லியில் அரசின் மதுபான விநியோகம் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தால், முதலமைச்சர் ரேகா குப்தா.
அரசுக்கு ரூ.2002 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு
இந்த சிஏஜி அறிக்கையில், டெல்லியில், ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையால், அரசுக்கு ரூ.2002 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,
- உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் சுமார் ரூ.941 கோடி...
- திருப்பி ஒப்படைக்கப்பட்ட உரிமம் மற்றும் மறு டெண்டர் விடுவதில் நிகழ்ந்த குளறுபடிகளால் சுமார் ரூ.890 கோடி...
- உரிமத்திற்கான கட்டணத் தள்ளுபடிகளா சுமார் ரூ.144 கோடி...
- மண்டல உரிமம் வைத்திருந்தவர்களிடமிருந்து தவறான பாதுகாப்பு வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டதில் சுமார் ரூ.27 கோடி...
என, மொத்தமாக ரூ.2026.91 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்த மணீஷ் சிசோடியா
சிஏஜி அறிக்கையால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 நவம்பர் 17ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய கலால் கொள்கைக்கு முன்பு, நகரத்தில், தனியார் மற்றும் அரசு நடத்தும் மதுபான விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், புதிய மதுபானக் கொள்கையின்படி, மதுபான விற்பனையிலிருந்து அரசு வெளியேறியது.
இதேபோல், கொள்கை மாற்றங்களை பரிந்துரைக்க உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை, எந்தவித நியாயமுமின்றி, அப்போதைய துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா புறக்கணித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான சிஏஜி அறிக்கை தற்போது டெல்லி சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, விசாரணைகள் நடைபெற்றுவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில், இன்னும் பல சிஏஜி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

