பெட்ரோல், டீசலை கட்டுப்படுத்த நியூட்ரலில் செல்லும் வாகனங்கள் - ரூ. 97 லட்சம் அபராதம் விதிப்பு
டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும் அப்பாவி மக்களின் வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக ஓசூர், தர்மபுரி, சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது வந்தது.
இதையடுத்து, தொப்பூர் மலைப்பாதையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு முதல் கட்டமாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில் 8 கிமீ துாரத்துக்கு தாழ்வாகவும், வளைவாகவும் அமைக்கப்பட்ட சாலையால் அடிக்கடி விபத்து தொடர்ந்து நடந்து வருகிறது. தொப்பூர் மலைப்பாதையில் லாரி உள்ளிட்ட கனரக வாகன டிரைவர்கள் எரிபொருளை சிக்கனப்படுத்த நியூட்ரல் கியரில் வருவதுடன், அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால், டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும் அப்பாவி மக்களின் வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொப்பூர் பகுதியில் சாலையை கடக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் இரட்டைப் பாலம் அமைக்கும் பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணியினை வேகப்படுத்தி இது போன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அரசு செயல்பட வேண்டும் என்பது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்த இரட்டைப் பாலம் திட்டத்தை விரைவாக வேகப்படுத்தினால் மட்டுமே தங்களது விலைமதிப்பற்ற உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறியதாவது:-
தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க தர்மபுரி ஆர்டிஓ அலுவலகம் மூலம் தொப்பூர் மலைப்பாதையில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சாலையின், இரு பகுதிகளிலும் 30 கிமீ செல்ல வேண்டும் என எல்இடி விளக்குகள் அமைத்துள்ளது.
மேலும் தொப்பூர் மலைப்பாதையில் 30 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு கடந்த 2021 முதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வேககட்டுப்பாடு கருவி மூலம் தர்மபுரி ஆர்டிஓ அலுவலகம் மூலம் நடப்பாண்டு வரை 13 ஆயிரத்து 429 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 97 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடந்து வருகிறது. மேம்பாலம் பணி முடியும் வரை, தொப்பூர் மலைப்பாதையில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் பகுதியை கண்டறித்து சாலையில் மாற்றம் செய்ய தர்மபுரி ஆர்டிஓ தாமோதரன், தர்மபுரி கலெக்டர் சாந்திக்கு பரிந்துரை செய்யப்பட்டது
அவர் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு பரிந்துரை செய்ததை அடுத்து, தற்போது தொப்பூர் மலைப்பாதையில் சாலையில், சாலை மாற்றம் மற்றும் மேம்பாடு பணியை மேற்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.