இன்று கொரோனா தேவி... அன்று பிளேக் மாரியம்மன்.. இது கோவை சொல்லும் கதை!
பிளேக் நோய் கோவையின் வரலாற்றில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அறியாத அந்த கொள்ளை நோய், அக்கால கோவை நகர மக்களை ஊரை விட்டே கூட்டம், கூட்டமாக ஓடச்செய்தது. மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது.
கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைக்கப்பட்டு இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் கோவையில் பெரும்பாலான பகுதிகளில் பிளேக் மாரியம்மன் கோவில்களை பார்க்க முடியும். பிளேக் மாரியம்மன் உருவானது எப்படி என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றும், தற்போது புதிதாக வந்துள்ள கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என நீடிக்கும் தொற்று நோய்களும் மக்களின் உயிர்களை பறித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் பிழைத்திருந்தால் போதும் என்ற மன நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு நிலை கோவை நகரில் நூறாண்டுகளுக்கு முன்பும் இருந்தது. அதற்கு காரணம், பிளேக். அந்நோயும் சீனாவில் இருந்து பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.
பிளேக் நோய் கோவையின் வரலாற்றில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அறியாத அந்த கொள்ளை நோய், அக்கால கோவை நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, கிலி பிடித்து ஊரை விட்டே கூட்டம், கூட்டமாக ஓடச்செய்தது. மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. முறையான தகவல் தொடர்பும், மருத்துவ வசதிகளும் இல்லாத 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பிளேக் நோய் பாதிப்பினால் கோவையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் உயிரிழந்தனர். 1901 ம் ஆண்டில் 53 ஆயிரத்து 80 ஆக இருந்த மக்கள் தொகை, 1911ம் ஆண்டில் 47 ஆயிரத்து 7 ஆக குறைந்து விட்டது என்பதில் இருந்தே, பிளேக் நோயின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
பிளேக் நோய் ஏற்படுத்திய உயிரிழப்புகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் தனது ‘கோயமுத்தூர் - ஒரு வரலாறு’ என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி, 1903 ம் ஆண்டில் முதன் முதலாக தெரியவந்த பிளேக், மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. பிறகு 1904, 1909, 1916, 1917, 1920, 1921, 1923, 1925, 1927, 1929, 1930 என தொடர்ந்து கோவை நகரத்தை பிளேக் நோய் உலுக்கி எடுத்தது. 1904 ம் ஆண்டில் 3045 பேர், 1909 ம் ஆண்டில் 2973 பேர், 1916 ம் ஆண்டில் 5582 பேர், 1917 ம் ஆண்டில் 3284 பேர், 1921ம் ஆண்டில் 4123 பேர், 1923 ம் ஆண்டில் 3888 பேர் என ஆயிரக்கணக்கான மக்கள் பிளேக் கொள்ளை நோய்க்கு கோவை மக்கள் பலியாகியதை குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் கூறுகையில், “சீனாவில் இருந்து 19 ம் நூற்றாண்டின் இறுதியில் ரயில்கள் மூலம் பிளேக் நோய் வந்ததாக சொல்லப்படுகிறது. 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. அக்காலகட்டத்தில் எந்த விதமான மருத்துவ வசதிகளும் இருக்கவில்லை. ஒரு எலி செத்து விழுந்தால் போதும், பிளேக் அச்சத்தினால் உடமைகளை எடுத்துக் கொண்டு மக்கள் ஊரை விட்டு மற்ற கிராமங்களுக்கும், வேறு ஊர்களுக்கும் கூட்டம் கூட்டமாக ஓடினர். நிலைமை சரியானதை அறிந்த பின்னர் 3 அல்லது 6 மாதங்களுக்கு பின்னர் திரும்ப வருவர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உயிரை பிளேக்கும், காலராவும் எடுத்திருந்தன. நகர விரிவாக்கம், சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக அந்நோய் ஒழிக்கப்பட்டது” என அவர் தெரிவித்தார்.
பிளேக் நோயின் வரலாற்று பின்னணியோடு, பிளேக் மாரியம்மன் கோவில்கள் உருவானது தொடர்பாக பேசிய எழுத்தாளர் இரா. முருகவேள், “20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோவையில் தொழில் வளம் பெருகியது. அக்காலகட்டத்தில் மக்கள் நெருக்கமான இடங்களில் வாழ்ந்து வந்தனர். 1900 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் வலைக்குள் இருந்த எலிகள் வெளியே வந்து விட்டதாம். அந்த எலிகள் வெளியே பரவி பிளேக் நோய் பரவியதாம். அரசு பங்களிப்பு, மருத்துவ வசதிகள், படிப்பறிவு உள்ளிட்டவை குறைவு காரணமாக பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. மக்கள் தங்களை காப்பாற்றக் கோரி ஆண்டவனிடம் சரணடையும் வகையில் பிளேக் மாரியம்மன் கோவில்களை கட்டினர். அம்மை நோயினால் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டதை போல, பிளேக் நோயினால் பிளேக் மாரியம்மன் கோவில்கள் கட்டப்பட்டன. அக்கோவில்கள் பிளாக் மரியம்மன், கருமாரியம்மன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அப்போது சாதாரண மக்களால் அக்கோவில்கள் உருவாக்கப்பட்டன. இப்போது ஒரு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலைக்கும், மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொரோனா தேவி சிலை விளம்பரம், வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.