ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்… ஆபத்தில் கோவை ஜவுளி ஏற்றுமதி
ஈரான் போர் எதிரொலி: ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு அச்சம் – கோவை தொழில் துறையினர் கவலை

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் ஈரான்–இஸ்ரேல் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பதற்ற நிலை காரணமாக, இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை ஜவுளித் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
300 கோடி டாலர் ஏற்றுமதி பாதிக்குமா?
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 200 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி (ஐக்கிய அரபு அமீரகம்) நோக்கி நடைபெறுகிறது. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 8 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறது.
தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நார்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறையினர் தெரிவித்தனர். பெட்ரோலியம் துணைப் பொருட்கள், எரிசக்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வதால், உற்பத்தி செலவுகள் சங்கிலி தொடர் போல அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களால் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கான சரக்கு அனுப்பும் பயண நேரம் சுமார் 22 நாட்கள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்டெய்னர் கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய செலவுகள் உயரக்கூடும். குறிப்பிட்ட காலக்கெடுவில் கோடைக்கால ஆர்டர்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும் என தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா விதித்த வரி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஜவுளித் துறை, தற்போது தான் மீண்டு வரும் நிலையில், இப்போர் சூழ்நிலை மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்தனர். எனவே, ஈரான்–இஸ்ரேல் மோதல் விரைவில் முடிவுக்கு வருவது ஜவுளித் துறைக்கு சாதகமாக இருக்கும் என்பது தொழில் துறையினரின் ஒருமித்த கருத்தாகும்.























