கோவை, நீலகிரியில் கனமழை ; இடிந்து விழுந்த உதகை அரசு மருத்துவமனை தடுப்புச்சுவர்..!
கன மழை காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் 50 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகர பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருப்பதுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இதேபோல புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை காரணமாக காந்திபுரம் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் மழை நீரும், கழிவு நீரும் சாலையில் வழிந்தோடியது. சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நின்றதால், துர்நாற்றம் வீசியது. இதன் காரணமாக பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகினர். மழைக் காலங்களில் வீடுகள், மருத்துவமனை, உணவகங்கள் அதிகமுள்ள அப்பகுதியில் சாலையில் சாக்கடை நீர் தேங்குவது தொடர்ந்து வருவதாகவும், கழிவு நீரை வெளியேறுவதை உடனடியாக தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர். குறிப்பாக சேரிங் கிராஸ் பகுதியில் தாழ்வான இருந்த சாலைகளில் குளம் போல் தேங்கி நின்ற மழை நீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கன மழை காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் 50 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டேட் பாங்க், மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் மருத்துவமனையின் தடுப்புச் சுவர் விழுந்ததது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த தடுப்புச் சுவரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை வாகனங்கள் நிறுத்துமிடம் அருகில் தடுப்புச்சுவர் விழுந்த போது, அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதேபோல மழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நாளை வரை நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மண் சரிவு காரணமாக இரண்டாவது முறையாக நீலகிரி மலை இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.