கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கட்டிடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் (எ) குமார் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கற்பகவள்ளிக்கு, குமாரின் நண்பரான மற்றொரு கட்டிடத் தொழிலாளி கணேசன் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து கண்டித்துள்ளார்.
இதையடுத்து கற்பகவள்ளி, தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடம் விட்டுவிட்டு கணேசனுடன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சோளக்காட்டு பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
10 ஆண்டுகள் கழித்து வந்த தீர்ப்பு
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு குமார் மனைவியை தேடி கருமத்தம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கற்பகவள்ளி தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். கதவைத் திறந்து வெளியே வந்த கற்பகவள்ளியைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த குமார், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில் கற்பகவள்ளி அலறி துடித்துள்ளார்.
அந்த சத்தம் கேட்டு தடுக்க வந்த கணேசனையும் குமார் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த கற்பகவள்ளி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கணேசன் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.























