நீலகிரி : மூதாட்டியை அதிர்ச்சியடைய வைத்த மின் கட்டணம் ; மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்
பழைய மின் மீட்டரை மின் வாரிய ஊழியர்கள் அகற்றி விட்டு, புதிய மின் மீட்டரை பொருத்தி உள்ளனர். வழக்கம் போல மின் கட்டணத்திற்கான தொகை தேவகியின் செல்போனுக்கு வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 3 பல்புகள் மட்டுமே உள்ள வீட்டிற்கு மின் பயன்பாடு கட்டணமாக 25 ஆயிரத்து 71 ரூபாய் செலுத்தும்படி ரசீது அனுப்பப்பட்ட நிலையில், மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாதமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தேவகி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். ஓட்டு வீட்டில் வசித்து வரும் மூதாட்டி, தனது வீட்டில் 3 மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் மூதாட்டி தேவகி வீட்டில் இருந்த பழைய மின் மீட்டரை மின் வாரிய ஊழியர்கள் அகற்றி விட்டு, புதிய மின் மீட்டரை பொருத்தி உள்ளனர். இதனிடையே வழக்கம் போல் மின் கட்டணத்திற்கான தொகை தேவகியின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. அதைப் பார்த்த மூதாட்டி தேவகி அதிர்ச்சி அடைந்தார்.
அதில் மின் பயன்பாட்டு கட்டணமாக 25 ஆயிரத்து 71 ரூபாயை செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அதிக தொகை கட்டணமாக செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டதால் தேவகி செய்வதறியாது தவித்தார். மேலும் இது குறித்து விசாரித்த போது அந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் இதே போல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த ரசீது அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தேவகியும், அப்பகுதி மக்களும் இணைந்து மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். மின் கட்டணம் நிர்ணயிப்பதில் குளறுபடி நடந்து இருப்பதாகவும், பயன்படுத்தியதை விட அதிக தொகை கட்டணமாக வந்து இருப்பதாகவும் புகார் கூறிய அவர்கள், முறையாக கணக்கீடு செய்து சரியான தொகையை கட்டணமாக நிர்ணயிக்கும்படி தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் நடத்திய விசாரணையில், மின் கணக்கீட்டாளர் ரமேஷ் என்பவர் நேரடியாக வீட்டிற்கு சென்று முறையாக கணக்கிடாமல் அவராகவே தோராயமாக மின் கட்டணத்தை நிர்ணயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷை பணியிடை நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் கட்டணம் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்