அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!
"பாறு கழுகுகள் அழிவிற்கு மனித தவறுகளும், மூட நம்பிக்கையும் முக்கிய காரணம். பிணம் தின்பவை என்பதால் அப்பறவைகளை இழிவாக கருதும் நிலையால், பாறு கழுகுகளின் அழிவை பெரிதாக கண்டு கொள்வதில்லை"
காடுகளில் உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழ்பவை பிணந்திண்ணி கழுகுகள் என அழைக்கப்படும் பாறு கழுகுகள். இறந்த உடல்களை உண்டு நோய் பரப்பும் நுண்ணுயிர்கள் பரவாமல் தடுப்பதில் பாறு கழுகுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இவற்றில் வெண்முதுகுப்பாறு, கருங்கழுத்துப்பாறு, செந்தலைபாறு, மஞ்சள்முகப்பாறு ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளன. தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள், தற்போது தமிழ்நாட்டின் நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், கேரளா, மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
பாறு கழுகுகள் அழிவிற்கு மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள், வன விலங்குகளுக்கு விஷம் வைத்தல், இறந்த உடல்களை புதைப்பதால் ஏற்படும் இரை தட்டுப்பாடு, வாழிட சூழல் குறைவு உள்ளிட்டவை காரணம் என்றாலும், மனித தவறுகளே அவை அழிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளை விழிப்புணர்வு மூலம் மீட்டெடுக்கும் பணிகளை செய்து வருகிறது அருளகம் என்ற தன்னார்வ அமைப்பு.
இது குறித்து அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் கூறுகையில், “இயற்கை பாதுகாப்பை முதன்மையான நோக்கமாக கொண்டு 20 ஆண்டுகளாக அருளகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மரபார்ந்த விதை சேகரிப்பு, நாட்டு தாவரங்கள் பாதுகாப்பு, மூட நம்பிக்கையால் அழிக்கப்படும் பச்சோந்தி, பாறை எலி, முள் எலி உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணி செய்து வருகிறோம். அதிலும் பாறு கழுகுகள் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு சத்தியமங்கலம், முதுமலை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் 82 கிராமங்களில் பணி செய்து வருகிறோம்.
காட்டில் உயிரிழக்கும் உயிரினங்களை உட்கொண்டு சுத்தப்படுத்தும் வேலைகளை பாறு கழுகுகள் செய்து வருகின்றன. அழுகிப் போன இறைச்சியை உட்கொண்டாலும் அவற்றிக்கு எதுவும் ஆகாது. நோய் கிருமிகள் மற்ற விலங்குகளுக்கு பரவுவதை தடுக்க பாறு கழுகுகள் இருத்தல் அவசியம். அதேபோல நோய் கிருமிகளால் மனிதர்கள் பாதிக்கப்படுவதையும் தடுத்து வருகிறது. வெண் முதுகு பாறு கழுகுகள் சுமார் 150 என்ற எண்ணிக்கையில் காணப்படுகிறது. மற்றவை 20 க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. பாறு கழுகுகள் அழிவிற்கு மனித தவறுகளும், மூட நம்பிக்கையும் முக்கிய காரணம். பாறு கழுகுகளை அபச குணமாக பார்க்கும் நிலை உள்ளது. பிணம் தின்பவை என்பதால் அப்பறவைகளை இழிவாக கருதும் நிலையால், பாறு கழுகுகளின் அழிவை பெரிதாக கண்டு கொள்வதில்லை.
மாடுகளுக்கு பயன்படுத்தும் 2 வலி நிவாரணி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனை முன் மாதிரியாக கொண்டு இந்தியா அளவில் அந்த மருந்துகளுக்கு தடை விதிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நீலகிரியில் பாறு கழுகுகளை பாதுகாத்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இனப்பெருக்க மையம் அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது முறையாக ஆரம்பித்தால், பாறு கழுகுகளை மீட்க உதவியாக இருக்கும்.
வனத்தை ஒட்டிய கிராமங்களில் விலங்குகள் மீதான எதிர்ப்புணர்வை குறைக்கும் வகையில் பந்திப்பூர் மாரியம்மா டிரஸ்ட் மூலம் புலி தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்று தருகிறோம். அரசு வழங்கும் இழப்பீடு கிடைக்க கால தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்கி வருகிறோம். பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாயாரில் ஒரு காட்சிக் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
பாறு கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும். பாறு கழுகுகளை மீட்டெடுப்பது என்பதை வனத்துறையினரால் மட்டுமே செய்து விட முடியாது. அவை வாழ்வதற்கான உகந்த சூழலை உருவாக்க அனைவரது பங்களிப்பும் முக்கியம்” என அவர் தெரிவித்தார்.