4 நாட்களில் திணறிய வண்டலூர் உயிரியல் பூங்கா - 1 லட்சம் பேர் பார்வையிட்டனர்
பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டம் 'காணும் பொங்கலுடன்' நிறைவடைகிறது. மக்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்வது வழக்கம். காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும்.
பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது. தமிழ்நாடு வனத் துறையைத் தவிர, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தீயணைப்புத் துறை, குடிநீர் வாரியம், போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சுகாதாரத் துறை, கல்வி மற்றும் பிற துறைகளும் பொங்கல் பண்டிகை நாட்களில் உயிரியல் பூங்கா நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டனர்.
கூடுதல் நுழைவுச்சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது, கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.பூங்காவில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டது, பூங்கா சுற்றுப்பாதையில் 5 உதவி மையம், அவசர மருத்துவ சூழலை எதிர்கொள்ள 5 மருத்துவ அவசர ஊர்தியுடன் 9 மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டது, குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மணிக்கட்டில் டேக் பொருத்தப்பட்டது, சக்கர நாற்காலி வசதி, வனத்துறை மற்றும் காவல்துறை சீருடை பணியாளர்களுடன் சேர்ந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த NCC மற்றும் NSS மாணவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழிகாட்டியாக உதவினர்.
பூங்கா நிர்வாகம் செய்துள்ள பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய LED திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிசிடிவி கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1,00,000 மேல் பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை புரிந்தனர். எவ்வித அசம்பாவிதமின்றி சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையினை பூங்கா நிர்வாகம் கையாண்டது.
பொங்கல் பண்டிகையின் போது பூங்காவிற்கு வருகை புரிந்தவர்களின் விவரம்.
14.01.202 3 - 7630
·
15.01.2023 - 17762
16.01.2023 - 34183
·
17.01.2023 - 31440
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
– சுமார் 9000 என மொத்தம் நான்கு நாட்களில் 100015 பார்வையாளர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர்.