Hitler Movie Review : கதை இருக்கா இல்ல டைட்டில் மட்டும்தானா...விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் விமர்சனம்
விஜய் ஆண்டனி நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள ஹிட்லர் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
S A Diana
Vijay Antony , Gautham Vasudev Menon , Riya Suman , Redin Kingsley
Theatrical Release
ஹிட்லர்
மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ.தனா. தற்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கியுள்ள படம் ஹிட்லர். கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா சுமன் , சரண் ராஜ் , விவேக் பிரசன்னா , ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் ஆகிய இரு படங்களும் வெற்றிபெறாத நிலையில் ஹிட்லர் திரைப்படம் அவருக்கு கைகொடுத்ததா என்பதை ஹிட்லர் படத்தின் விமர்சனத்தில் பார்க்கலாம்.
ஹிட்லர் படத்தின் கதை
தேனி மாவட்ட மலைகிராமம் ஒன்றில் ஆற்றை கடக்க முயலும் கூலித் தொழிழாள பெண்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறக்கும் காட்சியில் தொடங்குகிறது ஹிட்லர் படம். கதை அப்படியே நகர்ந்து சென்னைக்கு வருகிறது. தேர்தல் நெருங்கி வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது தமிழ் திராவிட சமூதாயக் கட்சி. இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார். எப்படியாவது மக்களுக்கு பணத்தைக் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் தொகுதிக்கு பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ திருடிவிட்டு செல்கிறார்கள். இத்துடன் அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்துவிடுகிறார்கள். இந்த கொலையை விசாரிக்கிறார் டிஜி கெளதம் வாசுதேவ் மேனன்.
இன்னொரு பக்கம் சென்னைக்கு புதிதாக வேலை தேடி வந்து. லோக்கல் ரயிலில் ஒரு பெண்ணைப் பார்த்து அவர் மேல் காதலில் விழுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. இரண்டு கதைகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்க ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் செய்து பணத்தை திருடுவது விஜய் ஆண்டனி தான் என கண்டுபிடிக்கிறார் கெளதம் மேனன். அவர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார். திருடிய பணத்தை என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தனா.
ஹிட்லர் திரைப்பட விமர்சனம்
இயக்குநர் தனாவின் முதல் படமான வானம் கொட்டட்டும் குடும்ப சூழலை மையப்படுத்திய ஒரு கதை . தந்தையை பிரிந்து வாழும் அண்ணன் தங்கை தனியாக ஒரு சமுதாயத்தில் வளர்ந்து வருவது. பல வருடங்களாக தொடர்பில் இல்லாத தந்தையை திடீரென்று எதிர்கொள்ள நேர்கையில் அவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள் என உணர்வுப்பூர்வமான ஒரு கதையை பேச முயற்சித்தார். ஆனால் ஹிட்லர் படத்தைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் காலம் காலமாக தேய்ந்து போன ஒரு ஜானரை அவர் கையிலெடுத்திருக்கிறார்.
பிரச்சனை என்னவென்றால் இந்த ஜானரில் இனிமேலும் புதிதாக சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம் தான். படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே இதுதான் க்ளைமேக்ஸ் என்று சொல்லிவிட முடிகிறது. ஒவ்வொரு கொலை நடக்கும்போதும் அதை விஜய் ஆண்டனிதான் செய்கிறார் என்பதை நாம் யூகித்துவிடாமல் இருக்க காதல் காட்சிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு ஒன்றும் பலனளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கம் போல் விஜய் ஆண்டனியின் சராசரிக்கும் குறைவான நடிப்பு கதைக்கு எந்த வகையிலும் சாதகமாக அமைவதில்லை. போலீஸாக வரும் கெளதம் மேனனை வைத்தே கூட முழு படத்தை இயக்கியிருந்தால் பார்வையாளர்கள் ஏதும் குறை சொல்லியிருக்கப் போவதில்லை.
ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவைக் காட்சிகள் கொஞ்சம் ஆறுதலாக அமைகின்றன. விவேக் பிரச்சனாவின் பின்னணி இசை எங்கேஜ் செய்தாலும் பாடல்கள் பெரிதாக கவர்வதில்லை. விவேக் பிரசன்னா துணிக்கடை பொம்மைப் போல் சில காட்சிகளில் வந்து போகிறார். விஜய் ஆண்டனியின் மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாகவே இடம்பெற்றுள்ளன. இருந்து என்ன பயண் கதை ரொம்ப பழசா இருக்கே...
இயக்குநர் தனா பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதம் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. வானம் கொட்டட்டும் படத்தில் மடோனா செபாஸ்டியன் , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரின் கதாபாத்திரமும் வழக்கமானதாக இல்லாமல் அவர்களுக்கே உரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாத்திரங்களாக இருக்கும். இந்த படத்தில் அதே அளவிற்கு இல்லை என்றாலும் நாயகி ரியா சுமன் ஆண்கள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாத ஒருவராக வருகிறார். கதைக்கும் அவரது இந்த குணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவது இயக்குநர் தனாவின் ஸ்ராங் ஜோன் என்று சொல்லலாம்.