’மச்சி ஒரு ட்ரிப் போலாமா?’ (12) – அட்டகாசமான டாப்சிலிப் பயண அனுபவம்..!
இயற்கையோடு நாட்களை கழிக்க விரும்புகிறீர்களா? வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு பதிலாக புதியதோர் இடத்தை மனம் தேடுகிறதா? வனம், வன விலங்குகளை கண்டு இரசிக்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான இடம், டாப் சிலிப்.
டாப் சிலிப் யானைகளும், மான்களும், புலிகளும் விளையாடும் காடு. இது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்திற்குள் உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து அதிக தூரமும் இல்லை. 37 கிலோ மீட்டர் தொலைவுதான். அதற்கென இரு சக்கர வாகனத்தில் கிளம்பி விடாதீர்கள். வனத்துறையினர் வந்த வழியிலேயே திருப்பி அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே சொன்னது போல யானை, புலிகள் உலவும் காடல்லவா? அதனால் இரு சக்கர வாகனத்திற்கு தடை உள்ளது. கார்களிலோ, பேருந்திலோ எந்த தடையுமின்றி செல்லலாம். பொள்ளாச்சியில் இருந்து டாப் சிலிப்பிற்கு நேரடியாக பேருந்துகளும் உள்ளன.
சேத்துமடையை தாண்டி தோட்டங்களுக்கு ஊடாக செல்லும் சாலையில், சென்றால் மலையடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி வழி மறிக்கும். அங்கு மதுபாட்டில்கள், சிகரெட்டுகள், பிளாஸ்டிக் சோதனை நடக்கும். ஏதேனும் அகப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் செலுத்த நேரிடும். எனவே ஏழில் கொஞ்சும் இயற்கை ரசிக்க நினைப்பவர்கள் மட்டும் டாப் சிலிப்பை தேர்வு செய்வது நல்லது.
மலையடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் 13 கிலோ மீட்டர் மலையேற வேண்டும். அபத்தான கொண்டை ஊசி வளைவுகளோ, பெரிய ஏற்ற இறக்கங்களோ இல்லாத பாதை. மலைப்பாதையில் ஏற ஏற அடர்ந்த வனத்திற்குள் நுழைந்திருப்பதை, அடர்ந்து விரிந்திருக்கும் காடு நமக்கு உணர்த்தும். அதேபோல டாப் சிலிப் செல்ல அதிகாலை நேரத்தை தேர்வு செய்வது உகந்தது. பகல் நேரங்களை காட்டிலும் அதிகாலை நேர அமைதியும், இயற்கை ஏழிலும் இரசிப்பதோடு, வன விலங்குகளும் காண கிடைக்கும். வழியெங்கும் காடுகளுக்குள் கண்களை சூழல விட்டால் மான், யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி என வன விலங்குகள் காட்சி தரும். பறவைகளின் கீச்சொலிகளும், பூச்சிகளின் ரீங்காரமும் அற்புத அனுபவத்தைத்தரும். அவற்றை இரசித்தபடி சென்றால் உலாந்தி வனச்சரகமும், டாப் சிலிப்பும் நம்மை அன்புடன் வரவேற்கும்.
மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!
டாப் சிலிப் பெயர்க்காரணம்
பச்சை பசேலென காட்சியளிக்கும் புல் தரைகளும், அதில் துள்ளி விளையாடும் மான்கள் கூட்டமும், வாக்கிங் செல்லும் காட்டு மாடுகளும், காட்டுப் பன்றிகளும் டாப் சிலிப் வந்து விட்டதை வெளிக்காட்டும். இங்கே எப்போதும் மான்கள் கூட்டம் மேய்ந்து கொண்டு இருப்பதை காணலாம். காடுகளுக்குள் எங்கேனும் புலிகள் இருக்கக்கூடும். அதிர்ஷ்டம் இருந்தால் காணும் வாய்ப்புண்டு.
டாப் சிலிப் தேக்கு மரங்கள் அதிகம் உள்ள பகுதி. இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து மரங்களை வெட்டி கொச்சி துறைமுகம் வழியாக இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதிக போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் மலை முகட்டில் இருந்து மரங்களை வெட்டி ஆற்றில் போட்டு விட்டு, கீழே நிற்கும் ஆட்கள் அந்த மரங்களை எடுத்துச் செல்வார்களாம். அதனால் தான் டாப் சிலிப் எனப் பெயர் பெற்றதாக சொல்லப்படுவது உண்டு. பெரிய பெரிய மரங்களை எடுத்துச் செல்ல யானைகள் தேவைப்பட்டன. அதனால் யானைகளை பிடித்து பழக்கப்படுத்தி, பயன்படுத்த வளர்ப்பு யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. அந்த வளர்ப்பு யானைகள் முகாம் இன்றளவும் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு, அடுத்து டாப்சிலிப் யானைகள் முகாம் பெயர் பெற்றுள்ளது. ஆங்கிலேயரின் இலாப வெறிக்கு டாப் சிலிப் என்றோ அழிந்து போயிருக்கும். அதனை காப்பாற்றியதும் ஒரு ஆங்கிலேயர்தான். ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரஸ் வுட் என்ற வன அதிகாரி, காடழிப்பில் இருந்து காடுகளை காப்பாற்றியவர். அவரது மறைவிற்கு பின்னர் அவரின் உடல் இக்காடுகளுக்கு இடையே நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ – இயற்கை அதிசயங்கள் காணும் கூர்க் பயணம்..!
’மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!
யானை சவாரியும், வளர்ப்பு யானைகள் முகாமும்..
வரலாறு கேட்டது எல்லாம் போதும். வாங்க டாப் சிலிப்பை சுற்றிப் பார்க்கலாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் டாப் சிலிப்பில் தனியார் விடுதிகள் எதுவும் இல்லை. வனத்துறை விடுதிகளில்தான் தங்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டுமென்றாலும், வனத் துறை கேண்டின் ஒன்று மட்டுமே உள்ளது. ஆங்காங்கே மர வீடு, மூங்கில் வீடு உள்ளிட்ட பல்வேறு தங்குமிடங்கள் உள்ளன. அவற்றில் தங்க ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தங்குமிடங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
யானைகளை பார்த்தாலே மனம் குதூகலிக்கும். அதிலும் யானை மீது அமர்ந்து, காட்டிற்குள் உலா வந்தால் எப்படி இருக்கும்? அந்த பேரனுபம் இங்கு கிடைக்கப்பெறும். அதற்காகவே பெரும் கூட்டம் இங்கு வரும். யானை மீது அமர்ந்து 20 நிமிடங்கள் காட்டிற்குள் உலா வருகையில் வானுயர்ந்து நிற்கும் மரங்களும், பசுமை போர்த்திய மலைகளும், காணக்கிடைக்கும் மான் கூட்டங்களும் மனதை கொள்ளை கொள்ளும்.
அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் கோழிகமுத்தி சென்றால், காடுகளுக்குள் யானைகள் நின்றிருப்பதையும், படுத்துறங்குவதையும் பார்க்கலாம். அதிகம் ஆச்சரியப்பட வேண்டாம். அவை கும்கி யானைகள் தான். கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகள் மேய்ச்சலுக்கு காடுகளுக்குள் விடப்பட்டு இருக்கும். ஊருக்குள் வந்த காட்டு யானைகளை விரட்ட வரும் கும்கி யானைகளும் இங்கு தான் பராமரிக்கப்படுகின்றன. வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருக்கும் வளர்ப்பு யானைகளுக்கு, பாகன்கள் உணவு வழங்குவதை இங்கு கண்டு ரசிக்க முடியும். அதேபோல காடுகளுக்குள் டிரெக்கிங் சென்று காடுகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
வனம், மலை, வன விலங்குகள், இருவாச்சி, பறவைகள் என இயற்கையை இரசித்தபடி தங்குமிடத்திற்கு சென்றோம். இரவு நேரத்தில் வன விலங்குகள் விசிட் செய்யும் என்பதால், தங்குமிடத்திற்கு வெளியே செல்ல அனுமதியில்லை என்றார்கள். அமைதியான இரவு நேரத்தில் யானையின் பிளிறல்களும், விலங்குகளின் சத்தங்களும் கேட்கக்கூடும்.
இயற்கையை ரசித்து மகிழ்ந்து, வன விலங்குகளை கண்டு குதுகலிக்கும் கானக காதலர்களுக்கு டாப் சிலிப் ஒரு சொர்க்கபுரி.
டாப் சிலிப் தாண்டிச் சென்றால் கேரள மாநிலமும், பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் நம்மை வரவேற்கும். அங்கு இதைவிட காடுகளுக்குள் அட்டகாசமான தங்குமிட வசதிகளும், சுற்றிப் பார்க்கும் ஏற்பாடுகளும் உள்ளதை அறிந்தோம். மறுநாள் பரம்பிக்குளம் நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது.
(பயணங்கள் முடிவதில்லை)
மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்
’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்
'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!