மேலும் அறிய
Advertisement
மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!
மலையும், மழையும் சார்ந்த அழகிய இடம், சின்னக்கல்லார். வழக்கமாகவே மழைப் பொழிவு இருக்கும் சின்னக்கல்லாருக்கு மழைக் காலத்தில் பயணித்தால்.....
இது தென்மேற்கு பருவ மழைக் காலம். கோவை மாநகரில் மழைச் சாரல் பொழிந்து கொண்டிருந்தது. வால்பாறையில் பருவ மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் செல்வதற்கு முந்தைய நாள் சின்னக்கல்லாரில் பதிவான மழையின் அளவு 8.8 செ.மீ. எனவே அதற்கேற்ப தயாராக காரில் புறப்பட்டோம். கோவையில் மாலை நேரத்தில் கிளம்பிய போது சாரலாக பெய்து கொண்டிருந்த மழை, பொள்ளாச்சி தாண்டியதும் அடை மழையாக கொட்டியது. எதிரே வரும் வண்டி கூட தெரியாத அளவு மழை. எனவே ஆழியாரில் இரவு தங்கி விட்டு, மறுநாள் காலை பயணத்தை துவங்கினோம்.
மழை விட்டாலும், தூவானம் விடவில்லை. மழைத் தூறல் விழுந்தது. ஆழியார் அணையை கடந்ததும், ஆனைமலை புலிகள் காப்பகம் வரவேற்றது. கூடவே மலைப் பாதையும் துவங்கியது. ஈரமான அப்பாதை வளைந்து நெளிந்து மலையேறியது. கொண்டை ஊசி வளைவுகளில் ஆழியார் அணையின் பிரமாண்டமும், அதையடுத்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்பட்ட தென்னை மரங்களும் கண் கொள்ளக் காட்சியாக இருந்தன. பருவமழையில் வனம் பசுமை கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே கொட்டும் அருவிகளின் பேரிரைச்சைலும், பறவைகளின் சத்தமும் இணைந்து காட்டை இசைத்துக் கொண்டிருந்தன. வழக்கமாக கொண்டை ஊசி வளைவுகளில் காட்சி தரும் வரையாடுகளின் தரிசனம், மழை காரணமாக கிடைக்கவில்லை.
மழைக்கால வால்பாறை
மழைக்கால வால்பாறை இயற்கை வரைந்த அற்புதமான ஓவியமாக காட்சியளித்தது. இதமான குளிர், மிதமான மழை, மழையை தூவும் கார் மேகங்கள், கொட்டும் அருவிகள், பசுமை கம்பளம் போர்த்திய காடுகள் என இயற்கையின் அழகு கொட்டிக் கிடந்தது. பள்ளத்தாக்குகளில் மெல்ல தவழ்ந்து வந்த பனிப் படலம் சாலையில் படர்ந்து மேலும் அழகூட்டியது. எதிரே நிற்பவர்கள் கூட தெரியாத அளவு பனி சூழ்ந்தது. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. இயற்கையை இரசித்தபடி மழையில் நனைந்து கொண்டே, சீறிப் பாய்ந்த டூவிலர் ரைடர்கள் கொஞ்சம் பொறாமை படவைத்தன.
கவரக்கல் எப்போதும் பனி படர்ந்திருக்கும் பகுதி. இப்போது சொல்லவா வேண்டும் என்பது போல பனி அடர்ந்திருந்தது. எங்கு பார்த்தாலும் காட்சியளித்த பசுமையும், பனியின் வெண்மையும் கண்களை குளிரச் செய்தது. கூடவே உடலும் குளிரில் மெல்ல நடுங்கியது. சூடாக ஒரு பிளாக் டீயை குடித்து விட்டு கிளப்பிய வண்டியை, வால்பாறை நகரில் நிறுத்தினோம். மழை சற்று வேகம் எடுத்திருந்தது. சாரல் மழை அடை மழை ஆவதும், மீண்டும் சாரல் ஆவதுமாக இருந்தது. சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கூழாங்கல் ஆறு
வால்பாறையில் இருந்து சின்னக்கல்லார் செல்லும் சாலையில் காரை திருப்பினோம். நான்கு புறமும் தேயிலைத் தோட்டங்களாக காட்சியளித்தது. இதெல்லாம் மழையா என்பது போல, அந்த மழையிலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே செல்லும் சாலையின் கீழே, கூழாங்கல் ஆறு சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. நேரம் கூடக் கூட ஆற்றில் வெள்ளப் பெருக்கும் கூடிக் கொண்டிருந்தது. பெருமழைக் காலத்தில் காட்டாறாக பாயுமாம். ஆற்றில் கால்களை வைத்ததும், குளிக்க வேண்டும் என்ற ஆசை தண்ணீரோடு அடித்துப் போனது. கண்ணாடி போல இருந்த தண்ணீருக்குள் கூழாங்கற்கள் நிறைந்து கிடந்தன. கூழாங்கல் நிரம்பி இருந்ததால் தான், கூழாங்கல் ஆறு எனப் பெயர் பெற்றுள்ளது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது போல.
சின்ன சிரபூஞ்சி
சற்று நேரத்திற்கு பின்னர் காரை கிளப்பினோம். கொட்டிய அடை மழை மழைப் பகுதிக்குள் வந்ததை உணர்த்தியது. சிறுகுன்றா, ஈட்டியார் எஸ்டேட் தாண்டியதும் வனத்துறை சோதனைச் சாவடி நிறுத்தியது. "யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கு. கவனமா போங்க. உங்க பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்" என வனப் பணியாளர் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தினார். கீழ் நீராறு அணை, சிங்கோனா, மேல் நீராறு அணை கடந்து சின்னக்கல்லார் சென்றோம். வழியெங்கும் மழை வரவேற்பு அளித்தது. வெண் மேகங்கள் மலைகளையும், பனி காடுகளையும் மூடியிருந்தது. மலைகளில் அருவிகள் பேரிரைச்சலோடு கொட்டியது. ஈரமான சாலைகளில் மரங்களின் இலைகள் படிந்திருந்தன. சாலையோர தேயிலைத் தோட்டங்களுக்குள் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன. இயற்கையின் பேரழகு நிரம்பிய அமைதியான சாலையில் செல்வது அற்புதமான அனுபவமாக இருந்தது.
மழை, மழை, மழை மட்டுமே
சின்னக்கல்லாரில் மழை பெய்தது. பெய்தது. பெய்து கொண்டே இருந்தது. ஒரு நிமிடமும் இடைவெளி இல்லை. அடைமழை, மிதமான மழை, சாரல் என மாறி மாறி சுழற்சி முறையில் பெய்து கொண்டிருந்தது. மலைகளில் இருந்து ஓடி வரும் கோணலாற்று நீருக்கு, மேல் நீராறு அணை அணை போட்டது. கோணலாற்றின் மீது சின்னக்கல்லாருக்கு நடந்து செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அரை மணி நேரம் போட்டோ சூட் நடத்தியதற்காக, அட்டைப் பூச்சிகளுக்கு இரத்தம் கொடுக்க வேண்டிருந்தது. ஏற்கனவே தயாராக வைத்திருந்த உப்பைத் தூவி தற்காத்து கொண்டோம்.
சுமார் 30 வீடுகள். மழைக்கு தயாராக எப்போதும் கையில் குடையுடன் நடக்கும் ஆட்கள். தலையில் பிளாஸ்டிக் கவர்களையும், உடலில் துணிகளையும் சுற்றிக் கொண்டு வேலைக்கு செல்லும் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள். யானை உடைத்துப் போட்ட அஞ்சலகம். ஒரு பள்ளிக்கூடம். ஒரேயொரு மாணவனுக்காக நடந்து கொண்டிருந்த அந்தப் பள்ளி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவனும் தற்போது வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றுவிட்டான். யானை உடைத்த அஞ்சலக சுவர், அச்சத்தை ஊட்டியது.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த இந்த ஊரில், தற்போது கணிசமான ஆட்களே வாழ்ந்து வருகின்றனர். காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அச்சுறுத்தல், ஓயாத மழை, பனி, அட்டைப் பூச்சி கடிகளுக்கு இடையே வேலை செய்தாலும் போதிய ஊதியம் கிடைக்காத நிலை காரணமாக அப்பகுதி மக்கள் சமவெளிப் பகுதியை நோக்கி கிளம்பிச் சென்று விட்டனர்.
சின்னக்கல்லார் அருவிக்கு செல்லலாம் என நினைத்தோம். கொரோனா ஊரடங்கில் புதர் மண்டி கிடப்பதோடு, அட்டைப்பூச்சிகள் அதிகம் என்றனர். அட்டைப் பூச்சிகளுக்கு இரத்த தானம் செய்ய வேண்டாம் என எண்ணி, அம்முயற்சியை கைவிட்டோம். அங்கிருந்த உணவகத்தில் ஆவி பறக்க பரிமாறப்பட்ட பிரியாணியை சுவைத்து விட்டு, சூடாக ஒரு பிளாக் டீயும் குடித்து விட்டு கிளம்பினோம்.
'கோடி அருவி கொட்டுதே' பாடல் காருக்குள் பாடியது. காருக்கு வெளியே கோடி அருவிகள் கொட்டும் போல. கொட்டும் அருவிகளின் பேரிரைச்சல் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
(பயணங்கள் முடிவதில்லை)
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion