மேலும் அறிய
Advertisement
'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!
நமது ஊரில் தரை வழி போக்குவரத்து போல, ஆலப்புழாவில் நீர்வழிப் போக்குவரத்து. வீட்டுக்கு வீடு கார், பைக்கிற்கு பதிலாக படகுகள்.
'மச்சி, ஒரு டூரிப் போலமா?' பயணத் தொடரில் கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து காடுகள், மலைகளில் பயணித்தோம். எத்தனை நாட்களுக்கு காடு, மலைகளை சுற்றிப் பார்ப்பது? எனவே இம்முறை புது வானம், புது இடம் தேடிப் பயணிக்கலாம் என யோசித்தபோது, முதலில் நினைவுக்கு வந்தது, கடல். ஆம், இயற்கையின் படைப்பில் மற்றொரு அதிசயம், கடல். பார்க்கப் பார்க்க திகட்டாத பிரமிப்பு. மலைக்காடுகளைப் போலவே, கடலும் மனதைக் கொள்ளும் பேரழகு கொண்டது. கோவையில் இருந்து தமிழ்நாட்டு கடற்கரைகள் தூரம். அரபிக்கடல் தான் பக்கம் என்பதால், அரபிக்கடலோரம் காற்று வாங்க எங்களது வண்டி மலையாள தேசத்திற்குள் சென்றது. அங்கே எங்கே செல்வது யோசித்தபோது, முதலில் நினைவுக்கு வந்தது ஆலப்புழா.
கிழக்கின் வெனிஸ் ஆலப்புழா
அதிகாலைப் பொழுது. விடியலுக்கு இன்னும் சற்று நேரமிருந்தது. பாலக்காட்டு கணவாய் காற்று முகத்தை வருடியது. எங்களது வண்டி சேலம் - கொச்சின் புறவழிச் சாலையில் சீறியது. கோவையில் இருந்து சுமார் 230 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஆலப்புழா. அலெப்பி என்றும் அழைக்கப்படுவது உண்டு. அதிகபட்சமாக 5 மணி நேரத்தில் சென்றுவிடலாம்தான். 12 மணிக்குள் படகு வீட்டிற்குள் குடி புகுந்ததாக வேண்டிய கட்டாயம் இருந்ததால், வண்டியின் வேகம் கூடிக் கொண்டிருந்தது.
இயற்கை ஏழில் கொஞ்சும் அற்புத கேரளம் வரவேற்றது. வாளையார் தாண்டி பாலக்காடு செல்லும் போது, தாமதமாக எழுந்த குழந்தைபோல காலைச் சூரியன் வணக்கம் வைத்தது. ஆங்காங்கே குறுக்கிடும் ஆறுகளும், பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்து படைத்தன. எந்த ஊருக்கு செல்வது என்றாலும், அந்த ஊரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? கூகுளில் ஆலப்புழா பற்றி தேடினேன். ஆலப்புழா பிரபல சுற்றுலா தலம் என்பதும், மிதக்கும் படகு வீடுகள் அதன் தனிச்சிறப்பு என்பதையும் காட்டியது. ஆலப்புழா 'கிழக்கின் வெனிஸ்' எனப் புகழப்படுகிறது என்பதை அறிந்தேன்.
பாலக்காடு தாண்டியதும் வண்டிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு, வயிற்றுக்கு இரை போட கடை தேடினோம். எந்த ஊருக்கு செல்கிறோமோ, அந்த ஊரின் உணவை சுவைத்து பார்க்க வேண்டும் அல்லவா? புட்டும், கடலையும் ஆர்டர் செய்தோம். என்ன காம்பினேசன்? நாக்கும் ருசியில் திளைத்தது. வயிறும் நிரம்பியது. மீண்டும் கிளம்பிய வண்டி எங்கும் இடை நிற்காமல் சென்றது.
மிதக்கும் நகரம்
நாங்கள் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்கூட்டியே செல்வதை உணர்ந்தோம். கொச்சினில் சிறு ஷாப்பிங் சிறிது நேரத்தை போக்கிவிட்டு கிளம்பினோம் ஏற்கனவே நாங்கள் ஆன்லைனில் படகு வீட்டிற்கு புக் செய்திருந்தோம். அதனால் 11.30 மணியளவில் நேராக அங்கு சென்றோம்.
படகு இல்லங்களை பொருத்தவரை மதியம் 12 மணியில் இருந்து அடுத்த நாள் மதியம் 12 மணி வரை என்பது ஒரு நாள் கணக்கு. கரையோரத்தில் வரிசையாக படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. விதவிதமாக வித்தியாசமாக வடிவங்களில் இருந்தன. எங்களது படகை தேடிக் கண்டுபிடித்து ஏறினோம். பட்ஜெட்டுக்கு ஏற்ப படகு வீடுகளை தேர்வு செய்யலாம். நேரிலும் வந்து பிடித்த படகை தேர்வு செய்து கொள்ளலாம்.
படகு வீட்டிற்குள் குடி புகுந்தோம். வெல்கம் டிரிங்காக கொடுக்கப்பட்ட ஜீஸை குடித்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்தேன். அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், வரவேற்பறை, பால்கனி, மீட்டிங் ஹால், சமையலறை, நவீன கழிப்பறை என சகல வசதிகளுடன் ஓட்டல்களைப் போல இருந்தன. படகோட்டியும், சமையல்காரரும், உதவியாளரும் படகில் இருந்தனர். 'பேக் வாட்டர்' பகுதியில் தண்ணீரை கிழித்துக் கொண்டு படகு நீர்வழிப் பயணத்தை துவக்கியது. படகு வேகமின்றி மெல்ல ஊர்ந்து சென்றது. காயலின் இருபுறமும் தென்னை மரங்களும், பச்சை பசேலென வயல்வெளிகளும், அழகிய கிராமங்களும் காட்சியளித்தன. இயற்கை பேரழகு மனதை கொள்ளை கொண்டது.
எத்திசையில் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர் மட்டுமே. தண்ணீரில் மிதந்தபடி படகுகள் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருந்தன. ஆடம்பர சுற்றுலா படகுகள், நாட்டுப் படகு, மோட்டர் படகுகள் என கடந்து சென்ற படகுகள் இரசித்தபடி பயணம் தொடர்ந்தது. நமது ஊரில் தரை வழி சாலை போக்குவரத்து போல, ஆலப்புழாவில் நீர்வழிப் படகு போக்குவரத்து. கார், பைக்கிற்கு பதிலாக வீட்டுக்கு வீடு படகுகள். பேருந்து போல கிராமங்களுக்கு செல்ல படகு வசதியும் உள்ளது. ஆலப்புழா, மிதக்கும் நகரம்தான்.
ருசியான மீன் சமையல்
மதிய நேர உணவிற்காக படகு கரையை ஓட்டி நிறுத்தப்பட்டது. சூடான சாப்பாடு, மீன் குழம்பு பரிமாறப்பட்டது. அடடா! அருமையான ருசி. சற்று நேரத்திற்கு பின்னர் மீண்டும் படகு கிளம்பியது. அப்பகுதியில் 137 ஆண்டு பழமையான கடலுக்குள் நீண்டு கிடக்கும் கடற்பாலம் உள்ளது. நாங்கள் சென்ற போது, பணிகள் நடந்து கொண்டிருந்ததால் மாற்றுப் பாதையில் படகு சென்றது. அப்பாலத்தை பார்க்க முடியாத வருத்தம் இருந்தது. இருப்பினும் இயற்கையின் கொள்ளை அழகு அவ்வருத்தத்தை பெரிதாக்கவில்லை. அப்போது வானம் கருத்து மழை கொட்ட இன்னும் இரம்மியமாக காட்சியளித்தது, காயல்.
இரவு உணவிற்கான ஆர்டரை பெற்றுக் கொண்ட சமையல்காரர், நாம் வாங்கித் தரும் மீனை சமைத்து தருவதாக கூறினார். படகு மீன் வாங்குவதற்காக ஒரு கரையில் நிறுத்தப்பட்டது. அங்குள்ள கடைகளின் முன்பு தண்ணீரில் மீன்கள் உயிரோடு இருந்தன. எந்த மீன் வேண்டுமென்றாலும், அப்போதே ப்ரெஷ்ஷாக பிடித்து தந்து விடுவார்கள். மீனை வாங்கிக் கொண்டு படகிற்கு மீண்டும் சென்றோம். மீன் சமையல் துவங்கியிருந்தது.
ரம்மியமான இரவுப் பொழுது
இரவெல்லாம் படகு நடுக் காயலில் மிதந்து கொண்டிருக்கும் எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரு கரையோரமாக படகு இழுத்துக் கட்டப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் படகு வீடுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு விடும். மறுநாள் காலை 9 மணி வரை அதே இடத்தில் தான் நின்றிருக்கும். மனதை தேற்றிவிட்டு படகில் இருந்து இறங்கி ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். இரவு நேரங்களில் படகு வீடுகளின் அலங்கார ஒளி கண்களை கவர்ந்தன. ஒரிரு மணி நேரங்களுக்கு பின்னர் படகு வீட்டிற்கு திரும்பியபோது, சுவையான மீன் உடன் உணவு தயாராக இருந்தது. சாப்பிட்ட பின்னர் இரம்மியமான இரவுப் பொழுது முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக கழிந்தது.
காலை கண்விழித்த போது படகு போக்குவரத்து துவங்கியிருந்தது. மெல்ல கிளம்பிய படகில், காலை உணவு முடிந்தது. சுற்றும் முற்றும் இரசித்தபடி வந்தோம். சீக்கிரமே கரைக்கு கொண்டு வந்துவிட்டது போல இருந்தது. அங்கிருந்து காற்று வாங்க கடற்கரைக்கு கிளம்பிய எங்களை, கொரோனா தொற்று காரணமாக கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். அதிரப்பள்ளி செல்லும் திட்டமும் அடைமழை காரணமாக கைவிடப்பட்டது.
மறக்க முடியாத பயண நினைவுகளுடன், "அந்த அரபிக் கடலோரம் ஒர் அழகைக் கண்டேனே... ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மாஹம்மா..." என்ற பாடலைக் கேட்டபடி கோவைக்கு புறப்பட்டோம்.
(பயணங்கள் முடிவதில்லை)
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion