மச்சி ஒரு டிரிப் போலமா? Part-5: ஊட்டிக்கு இந்த ரூட்டில் போயிருக்கீங்களா? இது வேற லெவல் ட்ரிப்!
ஒரே நாள். இரண்டு மாநிலங்கள். மூன்று புலிகள் காப்பகங்கள் வழியாக பயணிக்க ஊர்ச் சுற்றிகளுக்கான அட்டகாசமான பயண அனுபவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, திம்பம் – பந்திப்பூர் – முதுமலை சாலை.
ஒரே நாள். இரண்டு மாநிலங்கள். மூன்று புலிகள் காப்பகங்கள். பாதை முழுக்க கொட்டிக் கிடக்கும் இரம்மியமான இயற்கை காட்சிகள். அடர் கானகத்தின் ஊடாக செல்லும் சாலைகள். காணக் கிடைக்கும் கானுயிர்கள். திரில்லான அனுபவத்தை தரும் மலைப் பாதைகள் என ஊர்ச் சுற்றிகளுக்கான அட்டகாசமான பயண அனுபங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, திம்பம் – பந்திப்பூர் – முதுமலை சாலை.
புலிகள் காப்பகங்களின் வழிப் பயணம்
அன்றைய காலைப் பொழுதில் டீ குடிக்க வேண்டுமென தோன்றியது. வழக்கம் போல ஊட்டிக்கு வண்டியை கிளப்ப முடிவு செய்தோம். கோவையில் இருந்து நீலகிரியை இணைக்கும் பிரதான சாலைகள் இரண்டு. அவை குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள். இரண்டு சாலைகளிலும் பலமுறை ஏறி இறங்கி விட்டதால், புதிய பாதையில் செல்ல தீர்மானித்தோம். மூன்றாவது சாலையாக உள்ள மஞ்சூர் சாலையிலும் பயணித்த அனுபவமும் உண்டு. எனவே வேறு பாதைகள் உள்ளதா என யோசித்தோம். கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வழிகள் இருப்பதை அறிந்தோம். அப்போது நாங்கள் கர்நாடகா மாநிலம் வழியாக செல்லும் இரண்டாவது பாதையை தேர்ந்தெடுந்தோம். அதற்கு அந்த சாலையில் மூன்று புலிகள் காப்பகங்கள் அமைந்திருந்ததும் முக்கியக் காரணம்.
மலைக் காடுகள் என்றாலே இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும். அதிலும் புலிகள் காப்பக காடுகள் என்றால் சொல்லவா வேண்டும்?. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பல்லுயிர்களின் வாழ்விடம். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை ஆகிய 3 புலிகள் காப்பகங்கள் கோவை மண்டலத்திற்குள் அமைந்துள்ளது. அதையொட்டி கர்நாடகா மாநிலத்திற்குள் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் – பந்திப்பூர் – முதுமலை ஆகிய 3 புலிகள் காப்பகங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்துள்ளன. ஒவ்வொரு இடத்தையும் தனித்தனியாக சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. மூன்று இடங்களிலும் சூழல் சுற்றுலா மூலம் காடுகளுக்குள் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு நாள் விடுமுறை மட்டுமே இருந்தது. எனவே அப்பாதையில் ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம் எனப் புறப்பட்டோம்.
சுற்றுலா மனப்பான்மையுடன் இந்தப் பாதையை தேர்ந்தெடுப்பதை விட, ஊர் சுற்றும் மனத்துடன் தேர்வு செய்து பயணித்துப் பாருங்கள். வேறு எங்கும், எதையும் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. எதிர்பார்த்ததை விட அட்டகாசமான பயணமாகவும், ஆச்சரியங்கள் நிரம்பிய பயணமாகவும் இருக்கும்.
ஆபத்தான திம்பம் மலைப்பாதை
கோவையில் இருந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் வழியாக பண்ணாரியை சென்றடைந்தோம். பண்ணாரி வனச் சோதனைச் சாவடியை கடந்து சென்றதும், மலைப் பாதை துவங்கியது. மலை அடிவாரத்தில் இருந்து திம்பம் மலை உச்சி வரை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளில், அடர்ந்த வனப்பகுதி ஊடாக சாலை வளைந்து நெளிந்து மலையேறியது. தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் சரக்கு வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். வாகனங்கள் அணிவகுத்து செல்வதும், விபத்து ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிகழ்வுகளும் நடக்கும். நல்ல வேளையாக அன்று அத்தகைய பிரச்சனைகள் இல்லாததால், எங்களது பயணம் நிம்மதியாக சென்றது.
பரந்து விரிந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை. பசுமை போர்த்தியிருக்கும் அடர்ந்த வனம். ஆங்காங்கே கானுயிர்கள் நடமாட்டம். ஆபத்தும், அழகும் நிரம்பிய மலைப் பாதை என பயணம் சுவராஜ்ஜியமானது. இயற்கையின் கொடையை இரசித்தபடி, திம்பம் சென்றடைந்தோம். பின்னர் ஆசனூர் வழியாக தமிழ்நாடு எல்லையை கடந்து, கர்நாடகா எல்லைக்குள் நுழைந்தோம். ஆங்காங்கே காட்டு யானைகளும், மான்களும் கண்ணில் பட்டன. அங்கிருந்து சிறிய சிறிய சிற்றூர்களை கடந்து குண்டல்பேட் சென்றோம். குண்டல்பேட்டில் ’காடா ரோஸ்ட்’ மிகவும் பிரபலம். அதனை சுவைத்து விட்டு மீண்டும் எங்களது பயணம் தொடர்ந்தது.
கானுயிர்களின் புகலிடம்
குண்டல்பேட்டில் இருந்து பந்திப்பூர் நோக்கி செல்லும் சாலையின், இரு புறமும் விற்றிருந்த ஆலமரங்களும், அரச மரங்களும் சாலைக்கு அழகூட்டின. அடர்ந்த வனத்தின் ஊடாக ஏறியிறங்கி வளைந்து சென்ற சாலையில், பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரவேற்றது. பருவமழையில் துளிர்த்த பசுமையின் நிழல் வனமெங்கும் பரவிக் கிடந்தது. இயற்கையின் தேசத்தில் கானுயிர்களின் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மான்கள் துள்ளி விளையாடி ஓய்ந்து கொண்டிருந்தன. அவற்றை புலிகள் எங்கேனும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க கூடும். அவ்வப்போது யானைகள் குட்டிகளுடன் உலா வந்தன. மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டிருந்தன. சாலையில் வரும் வாகனங்களை காட்டு மாடுகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. வன விலங்குகள் கடந்து செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சாலையோரங்களில் எந்த சலனமும் இன்றி மேய்ந்தன. வாகனங்களை பார்த்துப் பார்த்து அவையும் பழகியிருக்கும் போல.
இயற்கையையும், வனவிலங்குகளையும் கண்டு இரசித்தபடி கக்கநல்லா வழியாக கார்நாடகா எல்லையை கடந்து, மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தோம். முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக தெப்பக்காடு, மசினகுடி வழியாக கல்லட்டி மலையில் ஏறினோம். வழியெங்கும் வனத்தின் வளங்களும், வன விலங்குகளின் காட்சிகளும் கேமராக்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தது.
திக்… திக்… நிமிடங்கள்
கடந்து வந்த வழியெங்கும் பலர் செல்போனும் கையுமாக காட்டிற்குள் செல்வதும், செல்பி எடுப்பதும் என வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருப்பதை காண முடிந்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. சாலையோர மேட்டில் பெண் யானை குட்டியுடன் நின்று கொண்டிருந்தது. மேட்டிற்கு கீழே ஒருவன் செல்போனில் செல்பி எடுக்க, யானையை நெருங்கிக் கொண்டேயிருந்தான். குறிப்பிட்ட தூரம் வரும்வரை யானை எதுவும் செய்யவில்லை. தூரத்தில் நின்றபடி யானையையும், அவனையும் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் யானையின் வால் முறுக்கேறியது. திடீரென முன்னே ஒரு அடி வந்து, ஒரு பிளிறு பிளிறியபடி தூம்பிக்கையை வீசியது. நூலிழையில் தப்பிப் பிழைத்தான். தலைதெறிக்க ஓடியவன் காரில் ஏறிக் கிளம்பினான். அக்காட்சிகளை கண்ட எங்கள் குலை நடுங்கியது. பயத்தில் இதயம் படபடத்தது. யானை இருக்கும் இடத்தை கடந்து செல்லும் தைரியம் வரவில்லை. சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின்னர் மெல்ல காரை நகர்த்தினோம். அவ்விடத்தை விட்டு நகர்ந்த பின்னரே எங்களுக்கு உயிர் வந்தது. யானை அமைதியாக அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. பெரும்பாலும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வரை, அவற்றால் நமக்கும் ஆபத்தில்லை என்பதை உணர்ந்தோம்.
கல்லட்டி மலைப் பாதை துவங்கியது. செங்குத்தான மலைப்பகுதி. ஆபத்தான சரிவுகள். 36 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் என பாதை பயம் காட்டியது. அப்பயத்தை போக்கி எழில் கொஞ்சும் இயற்கைசயை இரசிக்க வைத்தது. மலையேறி உதகைக்கு சென்றோம். அங்கு குளிருக்கு இதமாக சூடாக டீ குடித்ததும், எங்கள் பயணத்தின் இலக்கை அடைந்தோம். பின்னர் கோவை மாநரகருக்குள் நுழைந்த பின்னரும், வன வாசனை மனதில் நிலைத்திருக்கிறது.
(பயணங்கள் முடிவதில்லை....)
மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்
’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ Part-4 : அசர வைத்த அதிரப்பள்ளியும்.... ஆச்சரியப்பட வைத்த சாலக்குடியும்!