(Source: ECI/ABP News/ABP Majha)
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்...
தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் மீன்வளத்துறை வளாகம் அமைந்து உள்ளது. இங்கு இணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகங்கள் அமைந்து உள்ளன. இங்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் மீன்வளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். என்னென்ன திட்டங்கள் நடந்து வருகின்றன, பணிகளின் முன்னேற்ற நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காலை 5 மணிக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்குள் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து விட வேண்டும். இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக 5 மணிநேரம் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மானிய விலையில் படகுகளுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகரித்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு செய்து உரிய அறிவிப்புகளை வெளியிடுவார்" என்றனர்.
2022-23-ஆம் ஆண்டு மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நண்பன்(சாகர் மித்ரா) பணியாளராக பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த வருவாய் கிராமங்களை சேர்ந்த 19 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அரசுக்கும், மீனவர்களுக்கும் பாலமாக இருந்து மீனவர்களின் கடல் மீன்வளம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபராக மீனவ கிராமத்தில் செயல்படுவார்கள்.
அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் பணிகள் குறித்தும் உள்ளூர் மீனவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வானிலை முன்னறிவிப்பு செய்திகள், மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகள் மற்றும் இயற்கை பேரிடர்கள், சீற்றங்கள் குறித்த தகவல்களை மீனவர்களுக்கு அறிவித்தல், தினசரி மீன்பிடிப்பு, மீன்பிடி படகுகள் தொழிலுக்கு செல்வது மற்றும் திரும்புவது, மீன்களின் விலை மற்றும் விற்பனை போன்ற தகவல்களை சேகரித்து அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 19 சாகர் மித்ராக்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அப்போது, முதலமைச்சர் உத்தரவின்படி ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீனவர்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து பணியாற்ற நீங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர் மீனவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார். பெரியதாழை பள்ளிக்கூட கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளித்து உள்ளார். அதே போன்று மீன்பிடித்தலில் உள்ள இடையூறுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து உள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம், தடுப்பு சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்கரையில் வட்டம் கூறுதல் என்ற பெயரில் மீனவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் மீனவர் கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு பல திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
மீன்பிடித்தல் குறைந்த கால நிவாரணம் ரூ.6 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு கப்பல் மெக்கானிக், மாலுமி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மீன்வளக்கல்லூரியில் மீனவர்களுக்கு 5 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை தற்போது 20 சதவீதமாக முதல்-அமைச்சர் உயர்த்தி தந்துள்ளார். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார். தமிழக மீன்வளத்துறை இந்தியாவிலேயே முதன்மையானதாக வளர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனார்.