EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
EPS Speech: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

EPS Speech: அதிமுகவின் நிகழ்ச்சிக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு வைரல்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மாநில அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், சட்ட-ஒழுங்கை காப்பாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தவறிவிட்டதாகவும், போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து மாநிலம் முடங்கிப்போயுள்ளது என்றும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஆம்புலன்ஸ் ட்ரைவரை எடப்பாடி பழனிசாமி மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
”தில் இல்லாத திமுக அரசு”
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் சூழ பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, “ நான் ஒவ்வொரு முறை கூட்டத்தில் பங்கேற்கும்போது திமுகவினர் வேண்டுமென்றே இதேபோன்று ஆளில்லாத ஆம்புலன்ஸை கூட்டத்திற்குள் விட்டு கலாட்டா செய்கின்றனர். எதிர்க்க தில் இல்லாத கேவலமான அரசு இது. அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை. இதுபோன்று ஆயிரம் ஆம்புலன்ஸ்களை விட்டாலும் அசைக்க முடியாது.
#EdappadiPalanisami threatens an ambulance driver during a campaign in Vellore.#Vellore #TamilNadu #ADMK #EPS #Tnpolitics pic.twitter.com/OO5eG6XpSN
— DailyNews.Buzz (@DailyNewsBuz) August 19, 2025
”ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பேஷண்டாக மாறுவார்”
இந்த அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதனை ஓட்டி வரும் நபரே நோயாளியாக மாறி அந்த வாகனத்திலேயே ஏற்றிச் செல்லப்பட வேண்டி இருக்கும். அசிங்கமாக இல்லையா? பிரதான எதிர்க்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது. அரசாங்கம் எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும்? இதுகுறித்து எல்லாம் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
இதனிடையே,கூட்டத்திற்குள் புகுந்த ஆம்புலன்ஸை அதிமுகவின் தாக்க முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய எடப்பாடி, வாகன எண்ணை குறித்துக் கொண்டு அவரை அனுப்பி விடுங்கள். காவல்துறையிடம் புகார் கொடுத்து பின்பு விசாரித்துக் கொள்ளலாம் என எடப்பாடி அறிவுறுத்தினார். அப்போது, ஆம்புலன்ஸின் பின்புற கதவை திறந்து பார்க்கையில், உள்ளே எந்த நோயாளியும் இல்லை என்பது தெரிய வந்தது. இது உள்ளூர் திமுகவினரின் செயலே என வேலூர் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





















