Vijay Devarakonda: ‘உள்ளே நடந்ததை சொன்னா அவங்க வருத்தப்படுவாங்க’ - விசாரணை முடிந்து விஜய்தேவரகொண்டா பேட்டி!
உள்ளே நடந்ததை நான் கூறினால் அவர்கள் வருதப்படுவார்கள் என்று பேட்டி கொடுத்த பின் அங்கு இருந்து புறப்பட்டார் விஜய் தேவரகொண்டா.
ஆரம்ப காலங்களில் தெலுங்கு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அத்திரைப்படம் தெலுங்கில் மட்டும் இன்றி, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெரும் வெற்றி பெற்றது. அவருக்கென பெண் ரசிகர் பட்டாளமே உருவானது.
அதைதொடர்ந்து, அவரது நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படமும் தெலுங்கு மற்றும் தமிழில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் தென்னிந்திய திரைப்பட உலகில் மட்டுமின்றி, வட இந்தியாவிலும் விஜய் தேவரகொண்டாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
View this post on Instagram
அதன் விளைவாக, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக லைகர் எனும் ஆக்ஷன் திரைப்படம் உருவானது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி இப்படம் வெளியானது.
லைகர் தோல்வி:
சுமார் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில், மிகவும் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இதன் காரணமாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் 30 சதவீதத்தை கூட வசூலிக்கவில்லை. வசூலில் படுதோல்வியை சந்தித்த இப்படத்தால் நடிகர் விஜய் தேவரகொண்டா கடும் விமர்சனத்துக்கு உள்ளனார். சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் பிறகு லைகர் படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு தனித்தனியாக விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து லைகர் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிற்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
விசாரணை:
அதனடிப்படையில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விசாரணை முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா, “ அமலாக்கத்துறை அவர்களின் வேலையை செய்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பினால்தான் நான் சினிமா துறையில் வளர்ந்தேன். அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது பல பிரச்னைகள் உண்டாகும்.
அதுதான் வாழ்க்கை இது எனக்கு ஒரு அனுபவம். அவர்கள் அழைத்தார்கள் நான் வந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். உள்ளே நடந்ததை நான் கூறினால் அவர்கள் வருத்தப்படுவார்கள்.” என்று பேட்டி கொடுத்த பின் அங்கு இருந்து புறப்பட்டார்.