Vidaamuyarchi: ரெண்டு ஹீரோயின் வந்தாச்சு..வில்லன் வந்தாச்சு...ஹீரோ அஜித் எப்போ வருவாரு....விடாமுயற்சி பட அப்டேட்!
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துடன் இணைய இருக்கும் நடிகர்களின் தகவல்கள் இதோ...
அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மறுப்பக்கம் படக்குழு பற்றிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அஜித் குமாருடன் யார் யார் இணையப் போகிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
விடாமுயற்சி
மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க உள்ள படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்க இருந்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில காலம் தாமதாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஏகே ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அஜித்தோடு இணையும் நடிகர்கள்
ஒரு பக்கம் இந்த சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க மறுப்பக்கம் விடாமுயற்சி படத்தின் கதாநாயகி மற்றும் இன்ன பிற நடிகர்களின் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. த்ரிஷா மற்றும் தமன்னா உள்ளிட்ட இரண்டு மிகப்பெரிய ஸ்டார் நடிகைகள் இந்தப் படத்தில் அஜித் உடன் இணையவிருப்பதாகவும், மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் நடிகர் அர்ஜூன் தாஸூம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தகவலைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் படம் தொடங்க வேண்டும் என்றால் அஜித் வந்தாக வேண்டுமே என்று கேள்வியோடு காத்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி எப்போது தொடங்கும்
பைக்கில் உலகத்தை ஒரு சுற்று சுற்றி வருவதே அஜித்தின் கனவாக இருந்து வருகிறது. முதலில் அஜித் குமார் பைக்கில் உலகம் முழுவதும் பயணம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆண்டு இந்தியா முழுவதுக்குமான அவரது முதல் கட்டப் பயணம் முடிவடைந்ததாக தகவல் வெளியானது.
இதற்கு அடுத்ததாக துணிவு படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளுக்கு முன்பாக தனது இரண்டாம் கட்ட பயணத்தைத் தொடங்கினார் நடிகர் அஜித். இந்த முறை அவர் லே, லடாக், சத்தீஸ்கர், ஹரித்வார் ஆகிய இடங்கள் வழியாக பயணம் செய்தார். மேலும் தனது அடுத்தக் கட்ட பயணத்தை தொடர்வதற்கு முன்பு விடாமுயற்சி படப்பிடிப்பை முடிக்க இருந்தார் அஜித்.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அஜித் ரசிகர்களுக்கு பல்வேறு குழப்பங்களை எழுப்பியுள்ளது. விடாமுயற்சி படத்தின் பெயரைத் தவிர்த்து எந்த விதமான உறுதிப்பூர்வமான தகவல்களும் வெளிவராத நிலையில், தற்போது படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற கேள்வியையும் சேர்த்து எழுப்பியுள்ளது.