5 Years Of Super Deluxe : புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ளன.. ரசிகர்கள் தியாகராஜா குமாரராஜாவை கொண்டாடி வருகிறார்கள்
Super Deluxe : தியாகராஜன் குமாரரஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.
"ஒரு நல்ல படம் வெளியானபோது ரசிகர்கள் அந்த படத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றால் அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அடுத்த சில ஆண்டுகளில் அந்த படத்திற்கு கல்ட் ஸ்டேட்டஸ் கொடுத்துவிடுகிறார்கள்" என்று குமாரராஜா நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.
5 ஆண்டுகளை கடந்துள்ள சூப்பர் டீலக்ஸ்
ஆரண்ய காண்டம் வெளியானபோது அப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க தவறிய ரசிகர்கள், குமாரராஜாவின் அடுத்த படத்திற்காக காத்திருந்தார்கள். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரராஜா இயக்கிய படம் சூப்பர் டீலக்ஸ். முதலில் இந்தப் படத்திற்கு அநீதி கதைகள் என்று டைட்டில் வைத்திருந்த நிலையில் பின் சூப்பர் டீலக்ஸ் என்று டைட்டில் மாற்றப்பட்டது.
நான்கு இயக்குநர்கள்
மிஷ்கின், நீலன், நலன்குமாரசாமி என மூன்று இயக்குநர்கள் தங்களது ஸ்டைலில் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதினார்கள். ஃபகத் ஃபாசில், சமந்தா , மிஷ்கின் , ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி , காயத்ரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்தார்கள். சமூகம் கற்பிக்கும் ஒழுக்க நெறிகள், பிற்போக்குத்தனங்கள் , புனித பிம்பங்கள் , குறிப்பிட்ட சிலருக்கு எதிரான வன்முறைகள் போன்ற கட்டமைப்பிற்குள் மாட்டிக்கொண்ட கதாபாத்திரங்கள். இந்த சூழல்களில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ளும் போராட்டமே சூப்பர் டீலக்ஸ்.
ஹாலிவுட் இயக்குநர் பால் தாமஸ் ஆண்ட்ரசனின் ரசிகரான குமாரராஜா அவர் இயக்கிய மேக்னோலியா படத்தின் சாயலில் இப்படத்தை இயக்கியிருப்பார்.
இப்படத்தைப் போலவே மொத்தம் 8 கதாபாத்திரங்களின் கதையைச் சொல்லும் படம் மேக்னோலியா. யதார்த்த வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதில் இருந்து வெளியேறத் துடிக்கும் அவர்களின் போராட்டம்.
ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழக்கும் நேரத்தில் எதிர்பாராத ஒரு சூப்பர் நேச்சுரலான ஒன்று அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதுவே இந்த இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம். ஆங்கிலத்தில் தத்துவ ரீதியாக இந்த அம்சத்தை கையாண்டிருப்பார்கள். தமிழில் கொஞ்சம் நகைச்சுவை தன்மையோடும், இங்கு இருக்கும் சமூக கட்டமைப்புகளை கேள்வி கேட்கும் விதமாக கையாண்டிருப்பார் குமாரராஜா.