Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் பேட்டியளித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விடுவித்த நீதிமன்றம்
டெல்லியில், ஆம் ஆத்மி அரசின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட மதுபானக் கெள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவ் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தவறான விசாரணை மேற்கொண்டதாக சிபிஐ-க்கும் சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கதறி அழுத கெஜ்ரிவால்
இந்நிலையில், தீர்ப்புக்குப் பின் பேட்டியளித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மற்றும் தாங்கள் நேர்மையானவர்கள் என்றும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிமன்றம் கூறியிருப்பதாக சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதார். உண்மை வெல்லும் என்று எப்போதுமே தான் கூறி வந்ததாகவும், இந்திய சட்ட அமைப்பின் மீது தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியை முடிவுக்கு கொண்டுவர மோடியும், அமித் ஷாவும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
VIDEO | AAP national convenor Arvind Kejriwal (@ArvindKejriwal) breaks down as he addresses media after appearing before Rouse Avenue Court over the Delhi Excise Policy case. He says, "For the past few years, the way BJP has been accusing us in the Delhi excise policy case, today… pic.twitter.com/jtREb0JyVi
— Press Trust of India (@PTI_News) February 27, 2026
நீதிமன்றம் கூறியது என்ன.?
இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மதுபான கொள்கையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கே முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது. ஊகத்தின் அடிப்படையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், 23 பேர் மீதும் குற்றச்சாட்டே பதிய முடியாது எனவும் நீதிபதி ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்.
மேலும், தவறான விசாரணையை மேற்கொண்டதாக சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி சிபிஐ வழக்கு தொடுத்ததாகவும், சிபிஐ-யின் இந்த செயல்பாடு அனுமதிக்கப்பட்டால், அரசியலமைப்பு தத்துவங்களின் விதிமீறலுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணையில் உள்ள பலவீனங்களை நிரப்புவதற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி, வழக்கு நடத்துவது தவறு என்றும், கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கையில் கிரிமினல் நோக்கமோ, சதியோ இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு ஊழியரை ஏ1-ஆக மாற்றிய சிபிஐ அதிகாரிகள் மீது, துறை விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.























