Sivakarthikeyan: “அன்று சிறைப்பறவை; இன்று பட்டதாரி; அப்பாவால் மனம் திருந்திய கைதி” - சிவகார்த்திகேயன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!
சிறைக்கைதி ஒருவர் மனம் திருந்திய சம்பவத்திற்கு மறைந்த தனது அப்பா தாஸ் காரணமாக இருந்ததை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதி ஒருவர் மனம் திருந்திய சம்பவத்திற்கு மறைந்த தனது அப்பா தாஸ் காரணமாக இருந்ததை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
பன்முக திறமைக் கொண்ட சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் விஜய் டிவி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். சில படங்கள், விளம்பரங்களில் தலைக்காட்டிய அவர், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களை சொந்தமாகவும் தயாரித்திருந்தார். அவ்வப்போது தனது படங்களில் பாடி வரும் சிவா, அதனை தவிர்த்து மாப்ள சிங்கம், கனா, தும்பா, சிக்ஸர், லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் பாடியும் உள்ளார். மேலும் கோலமாவு கோகிலா, கூர்கா, நம்ம வீட்டுப் பிள்ளை, ஆதித்ய வர்மா, டாக்டர், டான், நாய் சேகர், எதற்கும் துணிந்தவன்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்தப்படியாக பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான், மாவீரன் படங்களில் நடித்துள்ளார். இதில் மாவீரன் படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று சிவகார்த்தியேன் அப்பாவும், மறைந்த காவல்துறை அதிகாரியுமான தாஸூக்கு 70வது பிறந்தநாளாகும்.
மனம் திருந்திய சிறைக்கைதி
இதனை முன்னிட்டு தனது அப்பாவின் காவல்துறை வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் மிக நீண்ட பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு. மேலே புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார்.
அந்தநபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணி புரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார்.என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள்.
சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும். இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும் கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி.தாஸ். கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிழ்ந்தவர்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம். கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவார். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா. மனித மனங்களை கொண்டாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.