S.Ve.Sekhar: அமீர் விவகாரத்தில் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருக்க கூடாது - எஸ்.வி.சேகர் காட்டம்
அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த ஒருவாரமாக பருத்திவீரன் படம் தொடர்பான பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான அப்படம் தொடர்பாக இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதில் ஞானவேல் அமீரை தரக்குறைவாக விமர்சிக்க, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, சினேகன், பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஞானவேல் ராஜா, அதில் அமீரை தரக்குறைவாக நேர்காணல் ஒன்றில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினைகள் உண்மை என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. ஞானவேல் வருத்தம் தெரிவித்த அறிக்கைக்கு, நடிகர் சசிகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று சென்னை வடபழனி பிரசாத் லேப்பில், ”எமகாதகன்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அமீர் - ஞானவேல் இடையேயான பிரச்சினை குறித்து பேசினார்.
அப்போது, “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்சது அமீர் தான். இஸ்லாமியரான அவர் தன்னுடைய சொந்த பெயரை மறைத்துக் கொள்ளாததால் அவரை எனக்கு பிடிக்கும். சில பேர் சினிமாவில் பெயரை மாற்றிக் கொள்வார்கள். அது தேவையே இல்லை. சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் நடைபெற்ற அமீர் - ஞானவேல்ராஜா பிரச்சினை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை கிரியேட்டராக இருக்கும் இயக்குநர் தான் ஸ்க்ரீனுக்கு கொண்டு வருகிறார். படம் வந்து ஜெயிச்ச பிறகு, 10 வருஷம் கழிச்சி அதைப் பற்றி தப்பா பேசுறது சரியான விஷயம் கிடையாது.
ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். வருத்தம் தெரிவித்திருக்க கூடாது. நமக்கு பிடிச்சதை செய்தால் அவரை ஆஹா ஓஹோ என பேசலாம். பிடிக்காததை செய்தால் அவரை பொதுவெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது தவறான விஷயம். மேலும் மன்னிப்பு கேட்டதை விட அந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் தான் பேசப்படும் என்பதால் நியாயமாக ஞானவேல்ராஜா அமீர் பற்றிய பேசிய அந்த நேர்காணலை நீக்கம் செய்ய சொல்லியிருக்க வேண்டும். அதுதான் சரியான முறை” எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: தன் பெயரை தமிழில் தப்பாக எழுதிய ஜோவிகா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..