Udhayanidhi Stalin: 'காமெடி படம் முதல் சீரியஸ் கதை வரை’... சினிமாவில் இருந்து விலகும் உதயநிதியின் திரைப்பயணம் இதோ..!
திரையுலகில் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமான மாமன்னன் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவரின் திரைப்பயணம் பற்றி காணலாம்.
திரையுலகில் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமான மாமன்னன் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவரின் திரைப்பயணம் பற்றி காணலாம்.
தயாரிப்பாளராக அறிமுகம்
2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சினிமா தயாரிப்பில் களம் கண்டது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக உதயநிதி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள் தவிர்த்து இந்த 15 ஆண்டு காலத்தில் ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, ஒரு நீர்பறவை, வணக்கம் சென்னை உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்துள்ளார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களை விநியோக உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றது. இது திரையுலகில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆதவன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றி நடிகராகும் ஆசையை நிறைவேற்றினார் உதயநிதி
நடிகர் உதயநிதி
2011 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக மாறினார் உதயநிதி. காமெடி கதையாக வெளியான இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, கலகத்தலைவன், கண்ணை நம்பாதே என உதய் நடித்த பல படங்கள் வெற்றி பெறவில்லை.
ஆனாலும் மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி என சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். தற்போது அவரின் கடைசிப் படமாக ‘மாமன்னன்’ படம் நாளை (ஜூன் 29) வெளியாகவுள்ளது. அமைச்சராக பதவியேற்றதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஆரம்ப காலக்கட்டத்தில் தான் எந்த பாதையில் செல்கிறோம் என்பதை அறியாத அளவுக்கு மட்டமான கதைகளில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி நல்ல கதையம்சம் கொண்ட கதையை தேர்வு செய்ய தொடங்கிய நேரத்தில் அவரின் சினிமா பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இது நிச்சயம் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் மீண்டும் தான் திரும்ப நடிக்க வரலாம். அப்படி வந்தால் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் சொல்லியுள்ளார். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.