Super Star Rajini: சூப்பர் ஸ்டார் பட்டம், விஜய் முதல் அஜித் வரை.. எதுக்கு சண்டை, ரஜினி அன்றும் இன்றும் சொன்ன பதில்..!
சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே தொல்லை தான் என ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே தொல்லை தான் என ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பட்டம்:
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்திடாத என ஏங்காத திரைநட்சித்திரங்களே கிடையாது. அப்படி தனக்கான உரிய அங்கீகாரம் கிடைத்த பின்பு, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது அதிகபட்ச ஆசையாக இருக்கும். அந்த ஆசையின் இலக்கு என்பது, ரஜினி எனும் வெற்றி அரக்கனிடம் கடந்த 3 தசாப்தங்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். சிம்பு தொடங்கி விஜய் - அஜித்தின் கடும் மோதலுக்கு மத்தியில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வரை அனைத்து தரப்பினருக்குமே இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது எப்போதுமே ஒரு தவிர்க்க முடியா மோகம் உண்டு.
விஜய் - அஜித் மோதல்:
மற்ற நடிகர்களை காட்டிலும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக விஜய் - அஜித் இடையே தான் கடும் மோதல் நிலவி வருகிறது. 2000-ஆவது ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் பேசி இருந்தார். மற்றொருபக்கம், திரையுலகில் ஆரம்பத்தில் ரஜினியின் ரசிகராகவே விஜய் தன்னை காட்டிக் கொண்டாலும், நாளடைவில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் குறிவைப்பது அவரது படங்கள் மூலம் தெளிவாக தெரிந்தது. அப்போது தொடங்கி தற்போது வரை எப்போதெல்லாம் ரஜினியின் படங்கள் பின்னடைவை சந்திக்கின்றனவோ, அப்போதெலாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பெரும் பேசுபொருளாக இருக்கிறது.
சட்டையை கிழித்துக் கொள்ளும் ரசிகர்கள்:
ரஜினியும், கமலும் எதிர்க்க ஆளின்றி தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்திகளாக இருந்தபோது, அவர்களது புதுப்புடங்கள் வெளியாகும் நாட்களில் இருவரது ரசிகர்கள் திரையரங்க வளாகங்களில் குவிந்து அதகளம் செய்தது, தங்களது பலத்தை காட்டியதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது அந்த மோதல் திரையரங்க வளாகங்களை காட்டிலும், சமூக வலைதளங்களில் தான் மிகவும் ஆக்ரோஷமாக காண முடிகிறது. அதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைப்பதில்லை. இந்த இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகிவிட்டால், திரையரங்கள் திருவிழாக்கோலம் பெறுவதோடு, எப்போது என்ன மோதல் வெடிக்குமோ என்ற அச்சமும் திரையரங்க உரிமையாளர்களை தொற்றிக்கொள்ளும். அந்த அளவிற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் நாயகன் தான் என, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
ரஜினி அன்றும், இன்றும்..
இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக கடும் மோதலே நீடித்து வரும் நிலையில், ரஜினியோ அந்த பட்டம் தொடர்பாக என்றோ ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டார். இதுதொடர்பாக கடந்த காலங்களில் பேசிய ரஜினிகாந்த், யாருடைய படம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தருகிறதோ அவர் தான் சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தார். அண்மையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ”நான் முதல் முறை ஹுக்கும் பாடல் வரிகள் பார்த்தபோது தாறுமாறாக இருந்தது. அப்போது ஒன்றே ஒன்று சொன்னேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் அதிலிருந்து எடுக்க சொன்னேன். சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லைதான். நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பே கேட்டேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன். ஒன்று கடவுளுக்கு. மற்றொன்று நல்ல மனிதர்களுக்கு” என ரஜினி பேசியிருந்தார்.
கண்களை உறுத்தும் பட்டம்:
திரையுலகில் நடிகர்களுக்கு அவர்களுக்கு ரசிகர்களால் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். ஆரம்பத்தில் இளைய தளபதி என அழைக்கப்பட்ட விஜய் தற்போது தளபதி ஆக மாறியுள்ளார். அஜித் விரும்பாவிட்டாலும் அவர் தல என அழைக்கப்படுகிறார். இதேபோன்று கேப்டன், ஆக்ஷன் கிங் என பல்வேறு பட்டபெயர்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. அதில் எந்த ஒரு பெயருக்கும் மற்ற நடிகர்கள் ஆசைப்படுவதில்லை. ஆனால், அனைவரது கண்களையும் உறுத்துவது சூப்பர் ஸ்டார் பட்டம் தான்.
என்றும் ரஜினி:
கடின உழைப்பு, ஸ்டைல், நடிப்பில் பன்முகத்தன்மை, கொடுத்த வெற்றிப் படங்கள், குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை கொண்டுள்ள ரசிகர் பட்டாளம், தோல்விகளை ஏற்றுக்கொள்வது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு சென்றது, போன்ற பல்வேறு காரணங்களால் தான் ரஜினி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராகா திகழ்கிறார். இன்றய கால ஓட்டத்தில் வணிக ரீதியாகவும், ரசிகர்களின் பேரதரவு காரணமாகவும் தமிழ் சினிமாவின் வணிகத்தில் யாரோ ஒருவர் ரஜினியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கலாம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு சொந்தமாகிவிடும் என்பது பொருளல்ல. ஏனென்றால் ரஜினியின் அடையாளமல்ல சூப்பர் ஸ்டார். அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான அடையாளமே ரஜினி தான் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.