Ponniyin Selvan 1: பொன்னியின் செல்வன் பாகம் 1 – அப்டேட் கொடுத்த மணிரத்னம் டீம்!
‛‛ஜெமினியின் சந்திரலேகாவுக்குப் பிறகு, இப்படித்தான் வரலாற்றுப் படங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது பாகுபலி. ஆனால், இனிமேல், பொன்னியின் செல்வன்தான் உதாரணம் காட்டப்படும்,’’
• பாகுபலியை மிஞ்சும்வகையில், உலக அரங்குகளைப் புரட்டிப்போட தயாராகி வரும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இத் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் இன்று வெளியாகியுள்ளது.
• வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி, பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துவிட்ட நிலையில், இன்று திடீரென டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சோழர்கள் வருகிறார்கள் என்று பொருள்படும் ஆங்கில வாசகங்களுடன் ரஹ்மானின் பின்னணி இசையில், 10 வினாடிகள் ஓடக்கூடிய டீசராக அமைந்துள்ளது.
• லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, திரைப்படத்தின் கடைசி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வந்துள்ள டீசர், வரும் வார இறுதிக்குள், முதல் பாடல் ஆடியோ அல்லது விரிவான டீசர் வெளியாகப் போகிறது என்பதற்கான அறிகுறி என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
• விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரும் திரை நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. எல்லோருக்கும் நடிப்பில் அசத்தக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அனைவருமே சிறப்புடன் நடித்திருப்பதாகவும் மணிரத்னம் டீமிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
• தற்போது படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் சேர்ப்புப் பணி, அதுவும் கிராபிக்ஸ் என கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும்வகையில், மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையும் பழமையும் இணைந்த ஓர் இசை வெள்ளத்தை ஓட விட்டிருக்கிறாம் ஏ. ஆர். ரஹ்மான்.
• ஜெமினியின் சந்திரலேகாவுக்குப் பிறகு, இப்படித்தான் வரலாற்றுப் படங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது பாகுபலி. ஆனால், இனிமேல், பொன்னியின் செல்வன்தான் உதாரணம் காட்டப்படும் எனும் அளவுக்கு, ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி,செதுக்கி உருவாக்குகிறதாம் மணிரத்னம் அன்ட் டீம்.
• இந்தப் படத்தின் பாடல் வெளியீடு, டீசர் வெளியீடு மற்றும் திரைப்பட வெளியீடு என அனைத்தையும் ஒரு திருவிழாவைப் போல் நடத்த திட்டமிட்டு வருகிறார்களாம். திரை நட்சத்திரங்கள், அரசியல் நட்சத்திரங்கள், பல்துறை நட்சத்திரங்கள் என இந்திய திரையுலகையே திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
• பன்மொழி தயாரிப்பாக 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருதால், அகில இந்திய நட்சத்திரங்கள் முன்னிலையில், அடுத்த 2 மாதங்களில் 2 அல்லது 3 முக்கியமான பிரம்மாண்ட முன்னோட்ட விழாக்கள் நடைபெற இருக்கிறதாம். இதற்கான ஏற்பாடுகளைத் தனியார் நிறுவனமொன்று திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
• இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் கூட, இந்தத் திரைப்படம் குறித்து வெளியே பேசக்கூடாது என தடைப் போட்டுவிட்டதால், வாய்திறக்க மறுக்கிறார்கள். ஆனால், தெரிந்த கதைதான், எப்படி சொல்லப்போகிறார்கள் என்பதில்தான், மணிரத்னத்தின் சவால் இருக்கிறது. இந்தச்சூழலில்தான், யாரும் எதிர்பாராத வகையில், மிகச் சிறப்பாகவம் விறுவிறுப்பாகவும் பிரம்மாண்டமாகவும் திரைப்படம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சின்ன, சின்ன குறைகள் இருந்தால்கூட, அதைத் திருத்தி மீண்டும் எடுத்துவிடுகிறார்களாம்.
• தற்போது நீண்ட, நெடிய படமாக வந்துள்ளதை, செதுக்கி, செதுக்கி திரைக்கதை மாறாமல் வடிவமைக்கும் எடிட்டிங் பணிதான் இரவு, பகலாக நடைபெறுவதாக கூறகிறார்கள்.
• தற்போது வெளியாகியுள்ள டீசரில், சோழர்கள் வருகிறார்கள் எனச் சொல்வதே, இத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் இரண்டும் தயாராகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கேற்ப முதல் பாகத்திலேயே, இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகளும் தயாராகிவிட்டன என்றும் தயாரிப்புக்குழு சொல்கிறது.
• எது எப்படியோ, இந்திய சினிமா, குறிப்பாக தமிழ்ச்சினிமா, சர்வதேச சினிமாவில் நிரந்தரமான முத்திரையை மீண்டும் ஒரு முறை ஓங்கி, ஒலிக்க பதிவு செய்ய வைக்குமா பொன்னியின் செல்வன் என்பதுதான் கேள்வி. அதற்கான பதிலை, செப்டம்பர் 30-ம் தேதி ரசிகர்கள் சொல்வது நிச்சயம்.