Director Marimuthu: “மனவேதனை தருகிறது” .. இயக்குநர் மாரிமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 8) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 8) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் மாரிமுத்து நடிகர் ராஜ்கிரண், , இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து சினிமாவில் பல ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். அப்படியே சின்னத்திரைக்கு வந்த் அவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ‘ஆதி குணசேகரன்’ என்ற கேரக்டரில் நடித்து வந்தார். இந்த சீரியல் மூலம் வயது வித்தியாசம் இல்லாமல் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
இதனிடையே இன்று (செப்டம்பர் 8) காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இயக்குநர் மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது. நான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் என்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு
தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “நாங்கள் பெரியார் திடலுக்கு அழைத்து இந்த ஆண்டு அவருக்கு பெரியார் விருது அளிக்க இருந்தும்.. இயற்கை இப்படி செய்து விட்டது... பகுத்தறிவாளர் மற்றும் திரை துறையினருக்கு மிக பெரிய இழப்பு... அவர் குடும்பத்திற்கு மட்டும் இல்லை அவரை இழந்து தவிக்கும் திரை துறை சார்ந்த அனைவரிடமும் நான் இரங்கலை தெரிவி்த்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், “இயக்குநர், நடிகர் திரு.மாரிமுத்துவின் மரணச்செய்தி இதயத்தில் இடி என விழுந்தது..! துயரம் கவ்வியது.. கண்ணீர் கலங்கியது.. வேதனை உள்ளத்தில் பரவியது.. அதிர்ச்சியில் உறைகிறேன்.. ஆற்றொண்ணா துயரத்தில் கரைகிறேன்...!” என கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு. மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பதிவில்,”திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.