Rohini Theatre: நரிக்குறவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்தது ஏன்? ரோகிணி தியேட்டர் விளக்கம்..!
நரிக்குறவர் குடும்பத்தினருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் பிரபலமான ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளது.
நரிக்குறவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி:
பத்து தல திரைப்படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் குடும்பத்தவர்களுக்கு சென்னை ரோகிணி தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், ரோஹினி திரையரங்க நிர்வாகம் இதற்கு விளக்கமளித்துள்ளது.
நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பத்து தல படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று காலை ரோகிணி திரையரங்குக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்க்க வந்த நரிக்குறவ இன பெண்களுக்கு தியேட்டருக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கடும் கண்டனம்:
மேலும் இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலான நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்பட பலரும் ரோகிணி திரையரங்க நிர்வாகத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்த நிலையில், நரிக்குறவர் இனத்தவரை தாங்கள் படம் பார்க்க அனுமதித்துவிட்டதாக விளக்கமளித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் பதிவிட்டுள்ளது.
உள்ளே விட மறுத்தது ஏன்?
”பத்து தல திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு இன்று காலை எங்கள் வளாகத்தில் நடந்த சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. பத்து தல படம் பார்க்க டிக்கெட்டுகளுடன் சிலர் தங்கள் குழந்தைகளுடன் தியேட்டருக்குள் நுழைய முயன்றனர்.
படத்திற்கு அதிகாரிகள் யு/ஏ தணிக்கை சான்றிதழ் அளித்தது நமக்கு தெரியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை U/A சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க சட்டப்படி அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 ஆகிய வயதுகளுடைய குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் தான் அனுமதி மறுத்துள்ளனர்.
மீண்டும் அனுமதி:
இருப்பினும் அங்கிருந்த பார்வையாளர்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வேறு கோணத்தில் பார்த்ததால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்கவும், இந்த நிகழ்வின் வீரியத்தைக் கருதியும் அந்தக் குடும்பத்தினர் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்துடன் படம் பார்க்கும் வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து ரோகிணி நிர்வாகம் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
— Rohini SilverScreens (@RohiniSilverScr) March 30, 2023
இந்நிலையில், முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர், அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்கா தர்பார் படத்தை குடும்பத்துடன் ரோகிணி திரையரங்கில் கண்டுகளித்த புகைப்படங்கள், யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட மெர்சல் படத்துக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்புக் காட்சி ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது உள்ளிட்ட புகைப்படங்கள் கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
5 வருசம் முன்னாடி இதே U/A படத்துக்கு ஏன்டா குழந்தைகளை கூட்டிட்டு போனீங்க? pic.twitter.com/p9T13gpnCy
— தோழன் O.3 (@pk_comrade_03) March 30, 2023
Let me come to your point. Dhanush 2nd son age was 9 or 10 during the release of darbar movie which is UA certified. Then how you can allow them ? #RohiniTheatre@RohiniSilverScr ? pic.twitter.com/Ukjs8WvLFQ
— V i v e k _ 🦜 (@vivek18b_) March 30, 2023
”யு - ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களுக்கு ரோகிணி திரையரங்கம் ஸ்டேட்டஸ் பார்த்து அனுமதி வழங்கும்”, ”தீண்டாமை இன்னும் ஒழியவில்லை.. மோசமாக தங்கள் செயலை ரோகிணி நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறது” என நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பாய்காட்ரோகிணி தியேட்டர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.