‛காலேஜ் படிக்கும் போது அஜித் சாருக்கு அவ்வளவு லெட்டர் எழுதுனேன்...’ - பருத்திவீரன் சுஜாதாவின் கலகல பேட்டி!
Actress Sujatha : நடிகை பருத்திவீரன் சுஜாதா, விருமாண்டி தொடங்கி ஆனந்தம் விளையாடும் வீடு வரை நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை பருத்திவீரன் சுஜாதா, விருமாண்டி தொடங்கி ஆனந்தம் விளையாடும் வீடு வரை நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
எத்தனை படங்கள் வந்தாலும், போனாலும் பருத்திவீரன் அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. அந்தப் படத்தில் நடிகை பிரியாமணிக்கு தாயாக வரும் அவர், கீச்சுக்குரலில் மதுரை மண் மணம் வீச வசனங்களைப் பேசியிருப்பார். அந்தப் படம் தொட்டு இன்று வரை தனது திரையனுபவங்களை சுஜாதா பகிர்ந்துள்ளார்.
அவருடைய பேட்டியிலிருந்து:
‛‛பருத்திவீரன் படத்தில் எனக்கும் கார்த்திக்குமான முதல் சீனிலேயே நான் அவரைக் கண்டபடி திட்ட வேண்டும். மற்றபடி படம் முழுக்க பிரியாமணியுடன் தான் காட்சிகள். அந்தப் படத்திற்காக நிறைய விருதுகள் கிடைத்தாலும் கூட பாரதிராஜா சார் என்னைப் பாராட்டியது இன்று மறக்க முடியாதது. நான் கேமரா இருப்பதையே உணராமல் இயல்பாக நடித்திருப்பதாக அவர் கூறினார்.
விருமாண்டியில் கமல் சார் தொடங்கி, கார்த்தி, அஜித் சார், விஜய் சார், சூர்யா, சிவகார்த்திகேயன், சசிகுமார் எனப் பலருடனும் நடித்துவிட்டேன். மக்கள் மனதில் சுந்தரபாண்டியன், பருத்திவீரன், கோலிசோடா போன்ற படங்கள் தான் இன்னமும் நிற்கின்றன. ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. சிவா சாரின் அண்ணாத்தே படத்தில் வாய்ப்பு கிடைத்தும் அது கைக்கு எட்டாமல் போய்விட்டது. 45 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தனர். அப்போது ஏற்கெனவே 4 படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இதை ஏற்க முடியாமல் போனதில் வருத்தம்.
அஜித் சாருக்கு லெட்டர் போட்டிருக்கேன்..
நான் கல்லூரி நாட்களில் இருந்தே அஜித் சாரின் ரசிகை. அப்போது அவருக்கு லெட்டர் எல்லாம் போட்டிருக்கேன். அது எனது கணவருக்குத் தெரியாது. அப்புறமாக வீரம் படத்தில் நடிக்கும்போது அவரிடம் அதை சொல்லியிருக்கிறேன். வீரம், விசுவாசம் படங்களுக்காக அஜித் சாருடன் 60 நாட்கள் பணியாற்றியுள்ளேன். நான் ரசித்த ஒரு நடிகருடன் நானே நடித்தது ஒரு சிறந்த அனுபவம். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் எல்லோருக்காகவும் திடீரென பிரியாணி சமைப்பார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அதெல்லாம் என்றும் நினைத்துக் கொண்டே இருக்கலாம்.
விஜய் சார் ரொம்ப எளிமை.
விஜய் சார் ரொம்பவே எளிமையானவர். நான் சுறா படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமானேன். அப்போது எனக்கு எப்படி நடிக்கப்போகிறேனோ, சொதப்பிவிடுவேனோ என்றெல்லாம் பயமாக இருந்தது. ஆனால், அவருடனான காட்சிகளின் போது அவரே என்னிடம் ரொம்ப கேஷுவலாகப் பேசி நடிக்க வைப்பார். அவர் ரொம்பவே எளிமையானவர்.
மற்ற நடிகர்களும் என்னை ஸ்பாட்டில் கூலாக வைத்திருப்பார்கள். எனக்குக் குடும்பத்தின் மீது அதிக அக்கறை உண்டு. மாதத்தில் 20 நாட்களாவது சூட்டிங் செல்ல நேரும்போதெல்லாம் என் அம்மா, அப்பா பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதால் கவலையின்றி சூட்டிங் செல்வேன். அதுபோல, நான் படங்களைத் தேர்வு செய்து நடிப்பதாலும் நேரத்தை மேனேஜ் செய்து கொள்கிறேன். வீட்டில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் சினிமாவும் ஒரு குடும்பம் தான். ஒவ்வொரு படத்திலும் ஒரு குடும்பம் கிடைக்கும். அதிலொரு மகிழ்ச்சி. கடைசியாக நான் நடித்த ஜெய்பீம் படத்தில் எனது கதாபாத்திரம் தான் கதையின் திருப்புமுனை என்பது படம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிந்தது. என்னைத் திட்டி நிறைய மீம்ஸ்கள் வந்தன. அத்தனையும் எனது நடிப்புக்கான அங்கீகாரம்.
என்னை இயக்குநர்கள் எனது மதுரைப் பேச்சுக்காகத்தான் நடிக்க வைக்கிறார்கள். எப்போதும் எளிமையாகத்தான் இருப்பேன். என்னுடன் யாராவது புகைப்படம் எடுக்க விரும்பினால் அலட்டிக்கொள்ளாமல் ஒப்புக்கொள்வேன். அவர்களின் மனங்களில் நான் இருக்கிறேன். அவர்களால் தான் சினிமாவிலும் இருக்கிறேன்.
நான் இன்னும் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நான் குடும்பத்துக்காக நடிப்பதைவிட்டுவிட்டதாக எழுந்த வதந்திகளை எல்லாம் யாரும் நம்ப வேண்டாம்."
இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறினார்.