Silambarasan TR: ஒரு மாடு அதோட குட்டிக்கு வச்சிருக்க பால.. ஆஸ்கர் மேடைக்கு சென்ற சிம்புவின் மாடு கதை: பின்னணி இதோ!
Silambarasan TR: நடிகர் சிலம்பரசன் மாடு பற்றி பேசியதைப் போலவே ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan TR) பேசியுள்ள வீடியோ ஒன்று சமீபகாலமாக அதிகம் பகிரப்பட்டு மீம் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உருவான ஜல்லிகட்டு போராட்டத்தின்போது, விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பான பீட்டாவுக்கு எதிராக சிலம்பரசன் இந்தக் காணொளியில் பேசியிருந்தார்.
“அதாவது ஒரு மாடு தன் குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை, அந்த கன்றுகுட்டியை கட்டிப்போட்டு பாலைக் கரந்து, அதில் உருவாகும் காஃபியை காஃபி டேவிலும் பரிஸ்டாவிலும் அமர்ந்து குடித்துக் கொண்டு விலங்குகளில் உரிமையைப் பற்றி பேசுறியா?” என்று சிம்பு பேசியிருந்தார். இந்த வீடியோ சமீப காலமாக மீண்டும் சமூக வலைதளத்தில் படுவைரலாகி வருகிறது.
ஆனால் இந்த வாதத்தை வைத்தவர் சிலம்பரசன் ஒருவர் மட்டுமில்லை. சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் விருது வென்ற வக்கின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) இதையேதான் தனது ஆஸ்கர் உரையில் பேசினார் என்றால் ஆச்சரியப்படுவீர்களா? ஆமாம், சிலம்பரசன் பேசிய அதே வார்த்தைகளை அச்சி பிசிறாமல் அவர் பேசினார்.
ஜோக்கர் படத்திற்கு ஆஸ்கார்
கடந்த 2020ஆம் ஆண்டு ஜோக்கர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வக்கீன் ஃபீனிக்ஸ் தன் ஆஸ்கர் உரையில் இப்படிப் பேசினார். “என் மனது முழுவதும் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறது. இந்த அரங்கில் இருக்கும் யாரைவிடவும் உயர்ந்தவனாக நான் என்னைக் கருதவில்லை. ஏனால் நாங்கள் அனைவரும் சினிமா மீதான காதலால் ஒன்றிணைந்திருக்கிறோம். இந்த ஊடகம் எனக்கு மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. இது இல்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.
எனக்கும் என்னைப் போன்ற சக கலைஞர்களுக்கும் இந்தத் துறை கொடுத்த மிகப்பெரிய பரிசாக நான் கருதுவது எங்களது குரலை குரலற்றவர்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்பை அளித்ததே. நாம் அனைவரும் தற்போது சந்தித்து வரும் இக்கட்டான சூழ்நிலைகளைப் பற்றி நான் அடிக்கடி சிந்திக்கிறேன்.
நாம் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக போராடுவதாக நம்மை சிந்திக்கத் தூண்டியிருக்கிறார்கள். ஆனால் நான் நம் அனைவரது போராட்டத்திலும் ஒரு ஒற்றுமையையே பார்க்கிறேன். பாலின சமத்துவத்துக்காக, நிறவெறிக்கு எதிராக, மாற்றுப் பாலினத்திற்கு ஆதரவாக, விலங்குகளின் நலனுக்காக என எந்த போராட்டம் என்றாலும் அதன் அடிப்பை ஒன்றுதான். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையான அநீதியை எதிர்த்து போராடுகிறோம்.
ஒரு நாடு , அந்நாட்டு மக்கள், ஒரு இனம் பிற எல்லா இனத்தின் மீதும் எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அதிகாரம் செலுத்த முடியும் என்கிற நம்பிக்கைக்கு எதிராக நாம் போராட வேண்டி இருக்கிறது” என்று தனது உரையைத் தொடங்கிய அவர் தொடர்ந்து இப்படிப் பேசினார்.
ஒரு மாடு , ஒரு குட்டி
This is the Joaquin Phoenix Oscar speech everyone will be talking about tomorrow pic.twitter.com/0pQLxpuQI2
— NowThis Impact (@nowthisimpact) February 10, 2020
”நாம் இயற்கையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டு விட்டோம். நமது தேவைகளுக்காக நாம் இயற்கை வளங்களை அழிப்பதை நியாயப்படுத்துகிறோம். நம்மால் ஒரு மாட்டை செயற்கையாக கருத்தரிக்க வைக்க முடிந்து, அதன் குட்டியை அதனிடம் இருந்து பிரிக்க முடிகிறது. பின் தனது குட்டிக்காக அந்த மாடு வைத்திருக்கும் பாலை எடுத்து தமது காஃபியிலும் காலை உணவிலும் பயன்படுத்துகிறோம்” என்று பேசியுள்ளார்.
வழக்கமாக ஹாலிவுட்டை பார்த்து தான் நாம் காப்பியடிப்பதாக சொல்வார்கள். இந்த முறை அதற்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஒருவேளை நடிகர் சிலம்பரசனின் குரல் லாஸ் ஏஞ்சலஸ் வரை கேட்டுவிட்டதோ!