Music Director Deva: என் மகனுக்கு தேசிய விருதா?.. ஸ்ரீகாந்த் தேவா அந்த படம் பண்ணதே தெரியாது .. தேவா கொடுத்த ஷாக்..!
2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான, 69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது கிடைத்துள்ளது. இது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியளிப்பதாக அவரது தந்தையும், இசையமைப்பாளருமான தேவா தெரிவித்துள்ளார்.
69வது தேசிய திரைப்பட விருதுகள்
2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான, 69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவில் சிறந்த கல்வி திரைப்படமாகஇயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' படமும், கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, அவரது தந்தையும், இசையமைப்பாளருமான தேவா ஆகியோர் இணைந்து கருவறை படத்தின் இயக்குநரோடு செய்தியாளர்களை சந்தித்தனர்.
மகனை பாராட்டிய தேவா
அப்போது பேசிய தேவா, இவர்கள் இருவரும் எப்போது ஸ்டூடியோவில் படத்தின் பணிகளை பார்த்து கொண்டு இருப்பார்கள். இதற்கு முன்னால் கட்டில் என ஒரு படம் எடுத்தார்கள். அது விரைவில் ரிலீஸ் ஆக போகுது. நிச்சயம் விருது வாங்கும் என நம்புறேன். இந்த கருவறை படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து விருது வாங்கும் அளவுக்கு இயக்குநர் திறமையாக எடுத்துள்ளார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் 'நீயே... நீயே...' என்ற அம்மா பாடல் இருக்கும். அந்த பாட்டுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மாநில விருது கொடுத்தார்கள்.
தற்போது அதே அம்மாவை தான் கதை என்பதால் கருவறை படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இது அம்பாளுடைய அனுக்கிரகம் தான் என சொல்வேன். உங்கள் முன்னாடி ஸ்ரீகாந்த் தேவாவுக்கு அட்வைஸ் ஒன்னு சொல்றேன். விருது எல்லாம் வாங்கியாச்சு. இதன்பிறகு வரும் படங்கள் எல்லாம், இந்த படமும் தேசிய விருது வாங்கி கொடுக்கும் என்ற தைரியத்தில் படம் பண்ண வேண்டும். அற்புதமான வழி திறந்துள்ளது. அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
திரைக்கு பின்னால் இருக்கும் எங்களிடம் ஆட்டோகிராஃப், செல்ஃபி எடுக்கும் அளவிற்கு வளர்த்து விட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்போது ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் விருது கிடைக்கும்ன்னு எதிர்பார்க்கலை. இப்படி ஒரு படம் பண்ணதே எனக்கு தெரியாது’ என தேவா தெரிவித்தார்.