G.V. Prakash Kumar: அழிவில்லாத செல்வம் கல்விதான்: வள்ளுவர் வாக்கை பகிர்ந்து ஸ்ரீபதியை வாழ்த்திய ஜி.வி.பிரகாஷ்
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள இளம்பெண் ஸ்ரீபதிக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
திருவள்ளுவர் எழுதிய குறளைப் பகிர்ந்து இளம்பெண் ஸ்ரீபதிக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்த ஸ்ரீபதிக்கு படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என். பி.எஸ் .சி சிவில் நீதிபதி தேர்வு எழுத ஆயத்தமாகி வந்த அதே சமயத்தில் அவர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். தனது கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்னறனர்.
முதலமைச்சர் வாழ்த்து
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
" சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண்டும்வைய மேலே!” என பாரதிதாசனின் வரிகளைப் பகிர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜி.வி பிரகாஷ் பாராட்டு
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை - திருவள்ளுவர்
— G.V.Prakash Kumar (@gvprakash) February 13, 2024
👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/VQokp7S7bJ
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை ’
என்கிற குறளை அவர் பதிவிட்டு ஸ்ரீபதிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே. மற்றைய செல்வமான பொன், பொருள், மண் ஆகியவை ஒருவனுக்கு சிறந்த செல்வம் ஆகாது. என்பதே இந்த குரலின் விளக்கம்.