Mayilsamy Son: அப்பா எல்லாருக்கும் உதவுனாரு... எங்களை அவர் நண்பர்களே கண்டுக்கல! மயில்சாமி மகன் வேதனை!
நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது, அப்பாவின் நண்பர்கள் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. என்னுடைய அப்பா தேடி தேடி சென்று உதவி செய்தார் என்று மயில்சாமியின் மகன் அன்பு கூறியிருக்கிறார்.

கோயம்புத்தூரில் உள்ள சத்தியமங்கலத்தில் பிறந்து வளர்ந்தவர் காமெடி நடிகர் மயில்சாமி. பாக்யராஜ் இயக்கி நடித்த 'தாவணிக் கனவுகள்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். கன்னி ராசி, என் தங்கச்சி படிச்சவ, வெற்றி விழா, பணக்காரன், சின்ன கவுண்டர், செந்தமிழ் பாட்டு, உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல், அவதார புருஷன் என்று ஆரம்பித்து சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் விவேக் உடன் ஏராளமான படங்களிலேயே இவர் நடித்துள்ளார். விவேக் மற்றும் மயில்சாமி காம்போவில் வந்த காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கும். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், கடைசி வரை அவரது வழியில் வாழ்ந்து மறைந்தார். தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தனக்கு, பண தேவை வந்தால் அதை கடன் வாங்கி சமாளிப்பாராம். அதே போல் தன்னிடம் உதவி என யாராவது கேட்டால், தன்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வந்தார்.

இவ்வளவு ஏன், பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் கடலூர் மாவட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது தத்தெடுத்து உதவி செய்வதை அறிந்து, அவருக்கு பரிசாக தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கொடுத்தாராம். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர். கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள மயில்சாமி ஒரு மிமிக்ரி கலைஞராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
மயில்சாமி கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுடைய தந்தையை போலவே ஒரு நடிகராக வேண்டும் என மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் முயற்சி செய்து வந்தனர். தந்தை இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க இருவரும் முயன்ற நிலையில், தற்போது வரை இவர்கள் நடித்த படம் ஒன்று கூட ரிலீஸ் ஆக வில்லை. எனவே யுவன் தற்போது வெள்ளித்திரை வேண்டாம் என முடிவு செய்து சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் நடித்து வரும், தங்கமகள் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அன்பு தொடர்ந்து வெள்ளித்திரை படங்களில் நடிக்க போராடி வருகிறார். இந்த நிலையில் தான், இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'எமன் கட்டளை' படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அன்பு மிகவும் உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்: 'அதாவது, என் அப்பா தன்னிடம் பணம், வசதி இல்லாத நிலையிலும் எல்லோருக்குமே உதவி செய்தார். ஆனால், அவரது மறைவிற்கு பிறகு நான் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்த போது யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. இவ்வளவு ஏன், என்னுடைய அப்பாவின் நண்பர்கள் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. நானாகவே முயற்சித்து வாய்ப்புகள் பெற்று இப்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளேன் என கலக்கத்தோடு கூறியுள்ளார்.





















