33 Years Of Anjali : பொன்மணி.. சின்ன சின்ன, கண்மணி மின்ன மின்ன.. 33 ஆண்டுகளை கடந்த அஞ்சலி..
மனிரத்னம் இயக்கி ரகுவரன் , ரேவதி, பேபி ஷாமிலி நடித்த திரைப்படம் அஞ்சலி. இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது அஞ்சலி திரைப்படம்.
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகின்றன.
சில படங்களை நினைவுபடுத்துவதற்கு நமக்கு அந்தப் படத்தின் பெயர்கள் தெரிந்திருக்க தேவையில்லை. அதில் நடித்த நடிகர்களின் பெயர்களை நாம் மறந்துவிடலாம், அந்தப் படத்தின் ஏதோ ஒரு காட்சி அல்லது அதில் வரும் ஒரு வார்த்தைக்கூட போதுமானது.
அஞ்சலி
அஞ்சலி என்கிற வார்த்தையை சொன்னால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது குழந்தைகளால் நிறைந்த ஒரு உலகம். யாருக்கும் பயப்படாமல், ஓடிக்கொண்டும் துள்ளிக்கொண்டும் விளையாடிக்கொண்டு சுதந்திரமாக பறக்க நினைக்கும் குழந்தைகளின் உலகம். அந்த உலகத்தில் சிறகுகள் அற்ற ஒரு சின்ன வெள்ளை நிறப் பறவையாக வந்து சேரும் அஞ்சலிதான் இப்படத்தின் கரு.
மணிரத்னத்தின் மாறுபட்ட முயற்சி
அஞ்சலி படத்திற்கு முன்பாக மனிரத்னம் நாயகன் மற்றும் அக்னி நட்சத்திரம் முதலியப் படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் காதல் கதைகள் அதிகம் புழங்கி வந்த காலம் அது . அந்த சமயத்தில் தனது முந்தையப் படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது அஞ்சலி. நகரங்களில் உருவாகி வந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தை மையமாக வைத்து அதிகளவிலான படங்கள் வெளிவராத சமயம் அது.
ரகுவரன் மற்றும் ரேவதி தனது இரு குழந்தைகளுடன் புதிதாக குடிவருகிறார்கள். அப்போது தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சத்தம்போட்டு பேசி சிரிக்கும் அவர்களை அந்த வளாகத்தில் வசிப்பவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற காட்சி ஒன்று இருக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் தங்களது வீட்டிற்குள்ளாக சுருங்கிகொள்வதை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் அந்த காட்சி. மனநல குறைபாடு உள்ளவர்களை சரியான புரிதலுடன் எதிர்கொள்ள பழகாத ஒரு சமூதாயத்தில், தனது மனநல வளர்ச்சி இல்லாத மகளை கொண்ட பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மிக உணர்வுப்பூர்வமாக காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர்.
குழந்தைகளின் உலகம்
சிறியவர்களை வைத்து பெரியவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்தப் படம் அஞ்சலி. இந்தப் படத்தில் குழந்தைகளே கதாநாயகர்கள், அவர்களுக்குதான் இண்ட்ரோ சாங், குழந்தைகளால் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்று, எப்போதுமே வேறு யாரும் மறுக்க முடியாத ஒன்றும் கூட.
ஒளிப்பதிவு
முந்தையப் படங்களில் ஒளிப்பதிவு செய்த பி.சி. ஸ்ரீராமுக்கு பதிலாக மது அம்பட் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ரகுவரன் தந்து குழந்தைகள் அஞ்சலி ஏன் தங்கள் வீட்டில் வந்து பிறந்தாள் என்பதற்கு ஒரு கதை சொல்வார். அஞ்சலி கடவுளின் கடைக் குழந்தை என்றும் அதனால் அவளை நன்றாக பார்த்துகொள்ளும் இந்த வீட்டிற்கு அவளை அனுப்பி வைத்தார் என்று சொல்வார். அஞ்சலி படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ஏதோ ஒரு வகையில் தேவதைகளை நினைவுபடுத்தும் படியான காட்சிகள். கண்கூசும் வெள்ளை ஒளி கதாபாத்திரங்களின் வெள்ளை நிற ஆடைகள் என களங்கமற்ற ஒரு குழந்தையின் அழகை காட்டுவதற்காக இந்த ஒளிப்பதிவை இப்படி அமைத்திருக்கிறார்கள் என்று தோன்றும் வகையிலான ஒரு அழகு, படத்தில் இருக்கும்
இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்யும் அஞ்சலி நிச்சயம் மணிரத்னம் இயக்கிய மற்ற படங்களை விட எந்த விதத்திலும் சளைத்தது இல்லை.