ஏ.ஆர் ரஹ்மான் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? திமுக எம்.பி கனிமொழி அதிரடி பதிவு
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மீது கடந்த சில நாட்களாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் திமுக எம்.பி கனிமொழி அவருக்கு ஆதரவளித்துள்ளார்

பாலிவுட் சினிமாத்துறையில் பிரிவினைவாதம் காரணமாக தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பேசியதைத் தொடர்ந்து அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பல்வேறு பாலிவுட் திரைப்பிரபலங்கள் ரஹ்மானை விமர்சித்து வரும் நிலையில் திமுக எம்.பி கனிமொழி ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் " ஏ ஆர் ரஹ்மானுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளத்திற்கு அப்பாற்பட்ட கலைகளைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதும் , இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகவும் கவலையளிக்கிறது. ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மற்றும் கலைஞர், அதே நேரத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இந்திய விழுமியங்களை கொண்டு சேர்த்த முன்னணி தூதரும் ஆவார். அவர் பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு அல்ல, மரியாதை மற்றும் நன்றியுணர்வுக்கு தகுதியானவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்முக சமூகத்தில் இடமில்லை." என பதிவிட்டுள்ளார்.
ரஹ்மான் என்ன சொன்னார் ?
அண்மையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கலந்துகொண்டு பேசினார். இந்த பேட்டியில் தான் இசையமைத்த சாவா திரைப்படம் பிரிவினைவாத உணர்ச்சிகளை தூண்டி பணம் சம்பாதித்ததாக அவர் தெரிவித்திருந்தார். படைப்பாற்ற இல்லாமல் அதிகாரம் கொண்டவர்கள் ஒரு படத்திற்கு யார் இசையமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். இது பிரிவினைவாத எண்ணத்தினால் கூட இருக்கலாம் என்று அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மாதிரியான படங்களால் உந்தப்பட்ட மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை அவர்கள் தெளிவானவர்கள் என ரஹ்மான் தெரிவித்திருந்தது பெரியளவில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து தான் யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் பேசவில்லை என்றும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்து ரஹ்மான் வீடியோ வெளியிட்டார். மேலும் இந்திய நாடு தனது வீடு , தனது ஆசான். இந்த நாட்டை சேர்ந்தவன் என்பதற்காகவும் இசையின் வழி சேவை செய்வதற்காகவும் தான் பெருமைப்படுவதாக இந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.




















