Vijay Milton On Vijay : ”நடிப்பையே நிறுத்தப்போறேன்னு விஜய் சொன்னார்..” விஜய் மில்டன் சொன்ன புதுத்தகவல்!
நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார். இந்தப் பெயரைச் சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது என்னவோ கோலி சோடா படம் தான். ஆனால் அவர் அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, பத்து எண்றதுக்குள்ள என நிறைய படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஆரம்பகால படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் விஜய் மில்டன். பல்வேறு படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மில்டன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல், தளபதி விஜய் எனக்கு நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக போகிறேன் என கூறியதாக சொல்லியுள்ளார். ஆனால் விஜய் இன்று அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்ச நடிகராக வளர்ந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
பத்து எண்றதுக்குள்ள..
நான் விஜய் படங்களில் கேமரா மேனாக இருக்கும்போதே அவருக்கு நிறைய கதை சொல்வேன். ஏன்னா நான் டைரக்டராக வேண்டும் என்று தான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்தேன். அதனால் யாரைப் பார்த்தாலும் ஒரு கதை இருக்குதுன்னு ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் நான் ஒர்க் பண்ற படங்களிலும் எனக்கு ஏதாவது கருத்து சொல்ல வாய்ப்பிருக்கா என்று தான் பார்ப்பேன். நீ கேமரா மேன் வேலையை மட்டும் பாருன்னு சொல்றவங்க படத்தில் வேலை செய்ய மாட்டேன். விஜய்யையிடம் நான் தொடர்ந்து கதை சொல்லிக்கிட்டே தான் இருந்தேன்.
பிரியமுடன் படத்தின் சூட்டிங்கின் போதே நான் விஜய்யிடம் ஒரு கதை சொன்னேன். தோழன் என்று அதற்குப் பெயர். அவரும் கதையை கேட்டுவிட்டு ஃபர்ஸ்ட் ஹாஃப் எக்ஸலன்ட் மில்டன். க்ளைமாக்ஸ் கொஞ்சம் சரியில்லை. நீங்கள் கதையை முழுசா ரெடி பண்ணிட்டு வாங்க என்று சொன்னார்.
பிரியமுடன் 100வது நாள் விழாவில், என்னை அவர் மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். அதன் பின்னர் ஒரு கேப் விழுந்தது. அதன் பின்னர் நான் சேரன் சார் புரொடக்ஷனில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படம் பண்ணினேன். விஜய் அதை கேள்விப்பட்டு தனது மேனேஜர் மூலம் படம் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.
ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. விஜய், சங்கீதா மேடம், அவர்களின் சிறு குழந்தை என மூவரும் வந்து படத்தைப் பார்த்தனர். படம் விஜய்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இதைப் பார்த்தால் எனக்கு மீண்டும் லவ் பண்ணனும் போல் இருக்கிறது என்று கூறினார். ஆனால் படம் ஓடவில்லை. விஜய் என்னை கூப்பிட்டு ஏதாவது கதை வச்சிருக்கீங்களா என்று கேட்டார்.
அப்போ தான் நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள கதையைச் சொன்னேன். கதை ஓகே கிளம்புங்க என்றார். எனக்கு செம்ம சந்தோஷம். முதலில் அதை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. அப்புறம் பிரகாஷ் ராஜ் கதையை கேட்டுவிட்டு அவரே விஜய்யிடம் சென்று நான் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். டூயட் மூவிஸும் இந்த பெரிய பட்ஜெட் படத்தைப் பண்ண முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. ஏவிஎம் சரவணன் விஜய்யை வைத்து வேட்டைக்காரன் தயாரிக்கிறார்.
இப்படியே நான் விஜய்யை வைத்து படம் செய்வது பல காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 5 வருஷமா டேக் ஆஃப் ஆகவே இல்லை. அதற்கிடையே அயன் படம் வந்தது. அதில் நான் யோசிச்சிருந்த நிறைய சீன் வந்திடுச்சி. எனக்கு ரொம்பவே அப்செட்டாகிவிட்டது. அப்போதுதான் நான் கோலி சோடா பண்ணேன். அது செம்ம ஹிட். விஜய்க்கு அப்போ கத்தி சூட் நடக்குது. அப்போ விஜய் என்னைப் பார்த்து கோலி சோடா படத்தைப் பாராட்டினார். அப்போது நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள படத்தை விக்ரமை வைத்து பண்ணுவதாக சொன்னேன். உடனே விஜய் அது என் கிட்ட சொன்ன கதை தானே சூப்பரா பண்ணுங்க அண்ணா என்றார். அதுதான் நான் விஜய்யை நேரடியாக கடைசியாக சந்தித்த தருணம். இவ்வாறு விஜய் மில்டன் கூறினார்.