Rajakumaran: நான் ஒரு சத்ரியன்.. தேவயானி விருப்புனாங்க.. கோயில்ல தாலி கட்டினேன்.. ராஜகுமாரன் ஓபன் டாக்!
ஒரு பெண் திருமணம் செய்துக் கொள்ள தகுதியான நபரை ஏற்றுக்கொண்டு தயாராகும்போது வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அப்பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அது ஒரு சத்ரியனின் கடமை என ராஜகுமாரன் கூறியுள்ளார்.

என்னதான் பிரபலமானவராக இருந்தாலும், தேவயானியுடன் நடைபெற்ற அவசர திருமணம் பற்றி இயக்குநர் ராஜகுமாரன் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
நீ வருவாய் என, காதலுடன், விண்ணுக்கும் மண்ணுக்கும், திருமதி தமிழ் என பல படங்களை இயக்கியுள்ள ராஜகுமாரன், நடிகை தேவயானியின் கணவராக அறியப்படுகிறார். சில படங்கள் நடித்திருக்கும் அவர், சமீபகாலமாக பல நேர்காணல்களில் அதிர வைக்கும் வகையில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு நேர்காணலில் பேசிய ராஜகுமாரனிடம், நீங்கள் நிறைய படம் உதவி இயக்குநராக வேலை பார்த்து விட்டு இயக்குநராக மாறினீர்கள். தேவயானிக்கு ஷூட்டிங்கில் டயலாக் எல்லாம் சொல்லி கொடுத்து இருப்பீர்கள். அப்புறம் ஏன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டீர்கள்? என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு பெண் திருமணம் செய்துக் கொள்ள தகுதியான நபரை ஏற்றுக்கொண்டு தயாராகும்போது வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அப்பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அது ஒரு சத்ரியனின் கடமை. நான் பிறப்பால் ஒரு சத்ரியன். இந்த மண்ணின் மைந்தன். கோயிலுக்கு சென்று திருமணத்திற்கு முன்னால் கூட கேட்டேன். நாம் நிஜமாக திருமணம் செய்ய வேண்டுமா?, இல்லை சாமி கும்பிட்டு விட்டு சென்று விடலாமா? என கேட்டேன். தேவயானி என்னை பார்த்து மொறைத்தார். அதெல்லாம் இல்லை கல்யாணம் செய்ய வேண்டும் என சொன்னார். நான் அவருக்கு அளிக்கும் சுதந்திரத்தை சொல்கிறேன். திருமணம் செய்வதற்கு 10 நிமிடங்கள் முன்னால் கூட கேட்டேன்” என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
அடையாளம் கொடுத்த சினிமா
எனக்கு சினிமா நிறைய கொடுத்தது. உலகின் எந்த மூலைக்கு போனாலும், பெரிய மனிதர்கள் என்னை தெரிந்து வைப்பதற்கான அடையாளத்தை சினிமா கொடுத்தது. பணத்தை எதிர்பார்த்து நான் எதுவும் செய்யவில்லை. பணம் கொடுத்தால் நான் வேலை செய்வேன் என்பதெல்லாம் இல்லை. மனம் விரும்பினால் மட்டுமே அதை செய்வேன். இப்போது இயற்கையான பொருட்கள் விற்பனை கூட பணத்திற்காக செய்யவில்லை.
நான் அதிகமாக தேவயானியின் கணவர் என அறியப்பட்டாலும், இயக்குநர் ராஜகுமாரனாகவும் பார்க்கப்படுகிறேன். இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை. இனியா அப்பா, பிரியங்கா அப்பா என நாளை சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. பள்ளியில் கூட தேவயானியை இனியாவின் அம்மா என்று தான் கூறுகிறார்கள். ஆனால் இதை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கடுமையாக கண்டித்தார்.
ஒருமுறை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த நிர்வாகியிடம் இது யார் என தெரியுமா என என்னை கைக்காட்டி அவர் கேட்டார். அந்த நபர் தேவயானி கணவன், நன்றாக தெரியும் என சொல்ல, அவ்வளவு தான் ஆர்.பி.சௌத்ரிக்கு கோபம் வந்து விட்டது. முதலில் இயக்குநர் ராஜகுமாரன், அப்புறம் தான் தேவயானி கணவர். நம்ம கம்பெனியில் தான் முதல் படம் பண்ணினார் என என்னைப் பற்றி பெருமையாக கூறினார் என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.





















