Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில், 20 மடங்கு வலிமையுடன் ஈரானை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார். இது எதற்காக தெரியுமா.?

அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே பயங்கர போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரான் மீது இப்போது உள்ளதைவிட 20 மடங்கு வலிமையுடன் தாக்குதல் நடத்தப்படும் என்றும், மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குவோம் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரென அவர் இப்படி எச்சரிக்கை விடுத்தது எதற்காக தெரியுமா.? பார்க்கலாம் வாருங்கள்.
“ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்தை தடுத்தால் மரண அடி“
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஈரான் ஏதாவது செய்தால், இப்போது தாக்கப்படுவதைவிட அவர்கள் 20 மடங்கு கடுமையாக தாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், கூடுதலாக, எளிதில் அழிக்கக் கூடிய இலக்குகளை குறி வைத்து தாக்குவோம், அதனால் ஈரான் மீண்டும் ஒரு தேசமாக கட்டியெழுப்பப்படுவது சாத்தியமற்றதாகிவிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதோடு, மரணம், நெருப்பு மற்றும் ஆக்ரோஷம் அவர்களை ஆட்கொள்ளும் என்றும், ஆனால் அவ்வாறு நடக்கக் கூடாது என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சீனா மற்றும் ஹார்முஸை பயன்படுத்தும் நாடுகளுக்கு அமெரிக்காவின் பரிசு“
இதோடு, சீனா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளுக்கு இது அமெரிக்காவின் பரிசு என்றும் கூறியுள்ள ட்ரம்ப், இந்த செயல் பெரிதும் பாராட்டப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீப்பற்றி எரியும் ஈரான் எண்ணெய் கிடங்குகள்
இதனிடையே, ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், கிடங்குகளிலிருந்து எண்ணெய் வெளியேறி, தீப்பற்றி எரிந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, ஈரான் தலைநகர் டெஹ்ரானை சுற்றியுள்ள எண்ணெய் கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனால், கிடங்குகளிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் எரிபொருள் தெருக்களில் வெளியேறி ஆறுபோல் பாய்ந்தோடுகிறத. அதில் தீ வேறு பற்றியதால், வடிகால்கள் வழியாக தீப்பற்றிய எண்ணெய் ஓடுகிறது. பல எரிபொருள் கிடங்குகளில் தீப்பற்றியதால், நகரம் முழுவதும் கரும்புகையால் சூழந்துள்ளது.
மேலும், இந்த நச்சுப்புகையால் மக்களுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும், எண்ணெய் மற்றும் கரியுடன் சேர்ந்த கருப்ப மழையும் பெய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், டெஹ்ரான் வாழவே தகுதியற்ற நகரமாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ட்ரம்ப் விடுத்துள்ள பயங்கர மிரட்டலால், ஈரான் எந்த மாதிரியான தாக்குதல்களை சந்திக்கப் போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், ஈரான் இதற்கு என்ன பதில் தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.























