கொள்கையை விட பணமா முக்கியம்?.. திரௌபதி 2 பாடல் சர்ச்சை.. சின்மயியை விமர்சித்த பேரரசு!
சில தினங்களுக்கு முன் திரௌபதி 2 படத்தில் இருந்து எம்கோனே என்ற பாடல் வெளியாகி இருந்தது. இதனை பாடகி சின்மயி பாடியிருந்தார். இந்த பாடலுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

திரௌபதி 2 படத்தில் பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் பேரரசு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரௌபதி 2 படம்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவன், பகாசூரன் ஆகிய 4 படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் மோகன் ஜி. இவர் அடுத்ததாக திரௌபதி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவுற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் வகையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரௌபதி படத்தின் முதல் பாகம் நாடகக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், மோகன் ஜி சாதிய அடிப்படையில் படம் எடுப்பதாக கடும் விமர்சனத்தையும் சந்தித்தார். எனினும் அதனைப் பற்றி கவலைப்படாமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த திரௌபதி 2 படத்தில் ரிச்சர்ட் ரிஷி தான் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரக்ஷனா இந்து சூடன் நடிக்கிறார். இவர் திரௌபதி தேவி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படம் 14ம் நூற்றாண்டில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ஹொய்சால அரசர்களின் ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், முகலாய படையெடுப்பால் தமிழ்நாட்டில் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
மன்னிப்பு கேட்ட சின்மயி
சில தினங்களுக்கு முன் திரௌபதி 2 படத்தில் இருந்து எம்கோனே என்ற பாடல் வெளியாகி இருந்தது. இதனை பாடகி சின்மயி பாடியிருந்தார். இந்த பாடலுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதன்படி பாடகி சின்மயியையும் விமர்சித்து பதிவுகள் வெளியானது. இதனையடுத்து இப்படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டார்.
அவர் வெளியிட்டப் பதிவில், “இசையமைப்பாளர் ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவர் அலுவலகத்தில் இருந்து இப்பாடலை பாட அழைத்த போது வழக்கம்போல சென்று பாடினேன். பாடல் பதிவு செய்யும்போது ஜிப்ரான் அங்கு இல்லை. இப்போது தான் அப்பாடல் பற்றிய சூழல் எனக்கு தெரிய வந்தது. அப்படி முன்பே தெரிந்திருந்தால் இப்பாடலை பாடியிருக்க மாட்டேன். ஏனென்றால் அப்பாடலின் சிந்தாந்தங்கள் என்னுடைய கருத்துக்கு முரணானது” என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரரசு கொடுத்த பதிலடி
சின்மயியின் இந்த பதிவுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே! பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் திரு. மோகன் ஜி அவர்கள் வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது!” என தெரிவித்துள்ளார்.





















