11 Years Of Attakathi :தமிழ் சினிமாவின் 'ரூட்டு தல' பா.ரஞ்சித் ...11 ஆண்டுகளை நிறைவு செய்த அட்டகத்தி..
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன
நாட்டாமை, சின்ன கெளண்டர், குங்குமபொட்டுக் கெளண்டர், தேவர் மகன் , கிழக்குச் சீமையிலே,என தொடர்ச்சியாக குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்த மனிதர்களின் பெருமை பாடும் கதைகள் படங்களாக வெளிவந்துகொண்டிருந்தன. அதே நேரத்தில் பெருவாரியான படங்கள் தொடங்கும்போதே சாதித் தலைவர்களின் புகைப்படங்களுடன்தான் தொடங்கின.
மன்னர்கள்
இந்தப் படங்களின் கதா நாயகர்களாக இருப்பவர்கள் ஊர் மக்கள் அனைவரும் போற்றுபவர்கள். உண்மையை மட்டுமே பேசுபவர்கள். நியாயத்தை நிலைநாட்டுபவரகள். வீர வம்சத்தினர்கள்.
மன்னர்களின் அடிமைகள்
மறுபக்கம் இந்த முதலாளிகளின் தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களாகவும். சின்ன முதலாளிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் பெண்களும், அவர்களது வாசலில் நின்று அழுக்குத் துணிகளை வாங்கிச் செல்பவர்களாகவும், ஊர் பஞ்சாயத்தில் ஒரு ஓரமாக கைகட்டி நிற்பவர்களாகவும், நாகரிகமற்றவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்தார்கள் இன்னொரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள்.
நான் யார்?
இதையெல்லாம் சினிமாவிற்கு வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார் ஓவியக் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர். அடிமைகளாக இருக்கும் இந்த மனிதர்களை பற்றி சொல்வதற்கு பல நூறு வருட கதைகள் இருந்தும் அதை சொல்ல யாரும் முன்வராதது ஏன் என்கிற கேள்வியை அவர் கேட்கிறார். இது தான் நான் என் வாழ்க்கைமுறை , என் உணவு என்னுடைய மனிதர்கள், எங்களின் கொண்டாட்டங்கள் , ஒற்றுமை, கோபம், என சுட்டிக்காட்டுவதற்கு ஒரு படம் கூட அவருக்கு கிடைக்கவில்லையா என கேட்டுக்கொள்கிறார்
யார் வரலாற்றை உருவாக்குகிறார்கள்?
வரலாற்றில் இடம்பெறும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு பொதுவான குணம் இருக்கிறது. யாருமே செல்ல துணியாத ஒரு பாதையில் அவர்கள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பவர்கள். அவர்கள் உருவாக்கும் பாதையே பின் வருபவர்களுக்கு வழித்தடமாக அமையும் . சினிமாவில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் அந்த நபர். ஒரு 11 ஆண்டுகாலத்திற்கு முன் வருவோம். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பா.ரஞ்சித். தனது முதல் படமாக அட்டகத்தியை இயக்கினார்.
திரையில் நீல நிறம்
இயக்குநர் ரஞ்சித் இயக்கியப் படங்களிலேயே இதுவரை சிறந்த படமாக கருதப்படுவது அட்டக்கத்திதான். மெட்ராஸ், காலா, சார்பட்ட உள்ளிட்ட காத்திரமான படைப்புகளை இயக்கியிருந்தாலும் இந்தப் படங்களில் பேசப்பட்ட அரசியலைவிட அட்டகத்தியில் படத்தின் வாழ்வியல் ஏற்படுத்திய தாக்கம் பெரிதானது என்று சொல்லலாம்.
அடிமைகள் இல்லாத கதை
தனது முதல் படத்தை இயக்கிய ரஞ்சித் மீது எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாதபோதே எல்லா தரப்பு மக்களும் இந்தப் படத்தை ரசித்தார்கள். யார் இந்த இயக்குநர் அவரது நோக்கம் என்ன எந்த மாதிரியான கதைகளை அவர் சொல்ல வந்திருக்கிறார் என்கிற எந்த முன்முடிவுகளும் இல்லாமல் மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். சந்தோஷமாக தனது நண்பர்களோடு ஊர்சுற்றிக் கொண்டு, தொடர்ச்சியாக காதல் வயப்பட்டு, தோல்வியடைந்து அழுது, கல்லூரிக்குச் சென்று கெத்தான ஒரு சீனியராக மாறி , வம்பு சண்டைகள் செய்து, பின் மீண்டும் காதல் வயப்பட்டு இப்படியான கொண்டாட்டமான ஒரு வாழ்க்கையைச் ஆடம்பரமில்லாமல் சொல்லிச் செல்கிறது படம்.
ஏன் மற்றப் படங்களைவிட அட்டகத்தி முக்கியமான படமாக மாறுகிறது தெரியுமா. ஆரம்பத்தில் குறிப்பிட்டப் படங்களில் அடிமைகளாக மட்டுமே காட்டப்பட்ட அதே மக்கள்தான் அட்டகத்தியின் கதை நாயகர்கள். அந்தப் படங்களைவிட அட்டக்கத்தி மாறுபட்டு தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னத் தெரியுமா? இது அடிமைகள் இல்லாத ஒரு கதை. 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் அட்டக்கத்திக்கும் அதை உருவாக்கிய பா.ரஞ்சித்திற்கும் வாழ்த்துக்கள்.