STR - Nelson: பாதியில் நிறுத்தப்பட்ட ‘வேட்டை மன்னன்’ மீண்டும் படமாகிறதா?... செம குஷியில் சிம்பு - நெல்சன் ரசிகர்கள்..!
சிம்பு நடிக்க இருந்து பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த வேட்டை மன்னன் படத்தின் ஸ்கிரிப்டில் குறைகள் இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்துக்கு முன்னதாக சிம்பு நடிப்பில் எடுக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தின் ஸ்கிரிப்டில் பல குறைகள் இருந்ததாக நெல்சன் கூறியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி ரிலீசாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கோலமாவு கோகிலா படத்டின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படம் பெரிதளவில் வெற்றிப்பெறாததால் நெல்சன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், சோர்ந்து விடாத நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார்.
ஜெயிலர் வசூல் ரீதியாக இல்லாமல், விமர்சனத்திலும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு திரைத்துறை பயணம் குறித்து பேசியுள்ள நெல்சன், தனது இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த வேட்டை மன்னன் படம் பாதியில் நிறுத்தப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பத்தில் விஜய் டிவியில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது தனது சிம்பு அறிமுகமானதாகவும், அதன் மூலம் தான் இயக்க இருந்த வேட்டை மன்னன் படத்தில் சிம்பு நடிக்க இருந்ததாகவும் கூறினார். சில நாட்களில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், நிதி உள்ளிட்ட காரணங்களால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால், முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து பேசிய நெல்சன், “ வேட்டை மன்னன் எனது ஆரம்ப காலத்தில் எடுக்க முடிவெடுத்தது. இப்பொழுது பார்க்கும் போது வேட்டை மன்னன் படத்தில் என் தரப்பில் சில குறைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன். . தற்போது என்னை கொஞ்சம் மேலும் வளர்த்து கொண்டதால், மீண்டும் வேட்டை மன்னன் படத்தை எடுக்கலாம் என்று தோன்றுகிறது. படம் பாதியிலேயே நின்றதால் மிகவும் வருந்தினேன்.
ஆனால், அந்த இடைப்பட்ட காலம் எனது தவறுகளை சரி செய்து கொள்ள தேவைப்பட்டது. வேட்டை மன்னன் படத்தின் அனுபவத்தால் என்னால் சரியான படத்தை தர முடிகிறது” என கூறியுள்ளார். முன்னதாக சிம்பு நடிக்க இருந்த வேட்டை மன்னன் படத்தில் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், வேட்டை மன்னன் படம் மீண்டும் எடுக்கப்படுவது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக நெல்சன் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Kamalhassan: தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மரணம்.. கமல்ஹாசனின் சோகப்பதிவு..