Ponniyin selvan: 2 ஆம் பாகத்தில் இதெல்லாம் இருக்கணும்... பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை..!
''தமிழன் தன் வரலாற்றை சொல்லவில்லை என்றால் தமிழ் அல்லாதவன் தங்களையே வரலாறாக அதை மாற்றுவார்கள்'' என்பது தான் இதில் வெளிப்படையாக தெரிகிறது.
தமிழ் இனத்தின் வீர வரலாற்றை ஒரு படைப்பாளி கையில் எடுத்துச் சொல்லும்போது அறத்துடன் கூற வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையில் கீரை வியாபாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய இடம் ஒத்துக்கப்படவில்லை என்பதால் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குநர் கௌதமனிடம், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி, வசூல் இவை அனைத்தும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பெரும் இனமான தமிழ் இனத்தின் வீர வரலாற்றை ஒரு படைப்பாளி கையில் எடுத்துச் சொல்லும்போது, அறத்துடன் கூற வேண்டும் என்று கூறினார்.
மேலும் சோழ பேரரசு 350 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மன்னர் வழிவந்த மன்னர்கள் ஆண்ட பேரரசு. அந்த பேரரசைக் குறிப்பிடும் போது, நீங்கள் தமிழனாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் தமிழ் உணர்வுடன் கூறுவது மிக மிக அவசியமானது.
அந்த இடத்தில் ஆளுமை தன்மை மற்றும் ஆண்மை தன்மையுடன் ஒரு படைப்பை செய்தால் தான் அந்த படைப்பு மரியாதைக்குரிய படைப்பாகும், வணங்குதலுக்குரிய படைப்பாகும். சோழர்களின் கொடி புலிக்கொடி. இது உலகம் அறிந்த உண்மை. அந்த புலிக்கொடியை கூட வெளிப்படையாக காட்ட முடியவில்லை என்றால் எதற்காக இந்த படைப்பை கையில் எடுக்க வேண்டும்.
மேலும் இப்படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், விசயாலய சோழருக்கு முந்தைய தலைமுறையினர் தெலுங்கர்கள் என்று கூறினார். இது என்ன வரலாறு? என்ன வரலாற்று ஆய்வு செய்திருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்தவர்கள் வன்னியர்கள் மற்றும் தேவர்கள் பற்றி வெளிப்படையாக சொல்ல முடிந்ததா…தமிழர்கள் தான் அந்த படைகளை நடத்தினார்கள் என்று ஏன் சொல்ல முடியவில்லை? அப்படி சொல்ல முடியாது என்றால் நீங்கள் ஏன் இந்த படத்தை கையில் எடுக்க வேண்டும்…உங்களுடைய நோக்கம் என்ன? என்றார்.
"ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்து என்பது இல்லை. சைவம் வைணவமும் மட்டுமே இருந்தது. வெள்ளைக்காரன் வந்ததற்கு பிறகு, தான் இந்து என்ற சொல் பிறந்தது. சங்கராச்சாரியார் கூட இதை எதிர்த்துள்ளார்! இன்று வெற்றிமாறன் சொல்லும்பொழுது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று சாடினார்.
View this post on Instagram
தமிழன் என்று வெளிப்படையாக உங்களால் சொல்ல முடியவில்லை. புலிக் கொடியை காட்ட முடியவில்லை. பான் இந்தியா படமாக வேண்டும் என்று நீங்கள் நினைத்ததால் தமிழர்களின் வரலாற்றை மறைத்து இந்தத்துவாவை பேசுகிறீர்கள். இதுதான் உங்கள் நோக்கம்! இந்த வேலை அனைத்தும் இரண்டாம் பாகத்தில் இருந்தால் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் இனம் அனைத்தும் இந்த படத்தை கடுமையாக எதிர்க்கும். ஆதித்ய கரிகாலனை பாண்டியர்களா கொன்றார்கள்…வடதமிழ் நாட்டுக்கும் தென் தமிழகத்திற்கும் கலவரம் ஏற்படுத்த பார்க்கிறீர்களா? அதை எழுதும் போது கல்கி மாற்றி எழுதியிருக்கலாம். தமிழனை தமிழனே கொன்றான் என்று கூறுவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது' என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளார்.
மணிரத்னம் மிகச் சிறந்த இயக்குனர் தமிழ் திரை உலகில் அவர் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால் உண்மையை பேச வேண்டும். ஆளுமைடன் படைப்பு செய்ய வேண்டும். ''தமிழன் தன் வரலாற்றை சொல்லவில்லை என்றால் தமிழ் அல்லாதவன் தங்களையே வரலாறாக அதை மாற்றுவார்கள்'' என்பது தான் இதில் வெளிப்படையாக தெரிகிறது.
தமிழன் என்று சொல்லுங்கள்; படையில் யார் நின்றார்கள் என்று கூறுங்கள். இந்த மண்ணுக்குரியவன் இந்த மண்ணை ஆண்டான் என்று சொல்லுகின்ற தைரியம் இருந்தால் சொல்லுங்கள்; இல்லையெனில் மிகக் கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும். பொன்னின் செல்வன் படக்குழுவினர் மிக முக்கியமான பொறுப்பாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
View this post on Instagram
மேலும் புலிக்கொடி முன்பு சோழர்களின் கொடியாக இருந்தது. சமகாலத்தில் பிரபாகரனின் கொடியாக உள்ளது. அதைக் காட்டினால் ஒன்றிய அரசு தடுக்கும் என்று நினைத்துதான் புலிக்கொடியை காட்ட மறுத்தீர்களா என்று படக்குழுவினருக்கு கேள்வி எழுப்பினார்.தமிழ் அறத்தோடு தமிழர்களின் வரலாற்றை கூறுபவர்களாக இருந்தால் நீங்கள் படைப்பைத் தொடுங்கள்; மடைமாற்றுபவர்களாக இருந்தால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார்.