இயக்குநர் பாலா படம் ட்ராப்... பரோட்டா மாஸ்டராக மாறிய 'சாட்டை' ஹீரோ... வலியை பகிர்ந்த நடிகர் யுவன்
Saatai Yuvan : இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றும் படம் கைவிடப்பட்டதால் மிகுந்த மன வலியில் இருந்த 'சாட்டை' பட ஹீரோ யுவன் இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறார்.
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்த பலரும் ஒரு சில காலகட்டத்தில் காணாமல் போன நிலையை கூட அடைந்துள்ளனர். அப்படி பட்ட இளம் ஹீரோக்களில் ஒருவர் தான் 2012ம் ஆண்டு எம். அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'சாட்டை' திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த யுவன்.
சாட்டை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் யுவன் அடுத்தடுத்து கமர்க்கட்டு, இளமை, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் சாட்டை படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு அவர் இத்தனை படங்களில் நடித்துள்ளார் என்ற அடையாளமே தெரியாமல் போனது.
இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க நடிகர் யுவன் கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அப்படத்திற்காக நடிகர் யுவன் எடுத்துக்கொண்ட பயிற்சி அனைத்தும் இப்போது அவரின் வாழ்க்கையாகவே மாறியுள்ளது. தற்போது நடிகர் யுவன் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ள யுவன் அவர் கடந்து வந்துள்ள கடுமையான பாதை குறித்து மன வலியுடன் பேசி இருந்தார்.
பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகர்களுக்கும் ஒரு கனவாக இருக்கும். எனக்கு அப்படி ஒரு கனவை நிறைவேற்றி கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படம் கைவிட்டபட்டதால் நானாக எடுத்து கொண்ட ஒரு கேப் மற்றும் இந்த கொரோனா காலகட்டம், இவை அனைத்தும் சேர்ந்து என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.
பாலா சார் படத்திற்காக நான் போட்ட முயற்சி வெளியில் யாருக்குமே தெரியவில்லை எனும் போதும் பலரும் அந்த படம் பற்றியே கேட்கும்போதும் அது வலியாக இருந்தது. அதனால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டது.
அந்த படத்தில் நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் பையன் கேரக்டர். அதனால் நாகூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் வேலைக்கு சேர்ந்து பரோட்டா போட, காய்கறி நறுக்க, டீ போட கற்றுக்கொண்டேன். கடையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர பப்ளிக் யாருக்குமே நான் யார் என்பது தெரியாது. பெரிய டி ஷர்ட் ஷார்ட்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு அந்த கடையில் வேலை செய்யும் பரோட்டா மாஸ்டர் போலவே இருந்தேன்.
படத்தில் நான் நடிக்கும்போது நான் கஷ்டப்பட்டதை பார்க்க போகிறோம் என மிகவும் ஆர்வமாக அனைத்தையும் செய்த பிறகு அது முடிந்துவிட்டது என தெரிந்ததும், அது மிகவும் மன வலியாக இருந்தது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் தேதியின் அறிவிப்பு வரை வந்தது. ஆனால் அதற்கு முன்னரே படம் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்கள். பின்னர் நாச்சியார் படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது முடிந்த பிறகு மீண்டும் இந்த படத்தை எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அப்படம் ட்ராப் செய்யப்பட்டதாக சொல்லிவிட்டார்கள். இது நடந்து முடியவே இரண்டு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
பாலா சார் படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும் அவருடன் இணைந்து வேலை செய்த அனுபவம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. ஆனால் அதை ஒரு படம் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என பேசி இருந்தார் நடிகர் யுவன்.