Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?
35 வயது வரை மட்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் 35 வயதிற்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.
துஷாரா விஜயன்
2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் இவர் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் பரவலான கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் இப்படத்தில் துஷாராவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது.
கழுவேத்தி மூர்க்கன் , அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் மற்றும் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார் துஷாரா. கிராமத்து பெண்ணாக ஒருபக்கமும் நவநாகரிக பெண்ணாக இன்னொரு பக்கம் என இரு விதமான கதாபாத்திரங்களிலும் எதார்த்தமாக ஒன்றிப்போகக் கூடிய நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக துஷாரா பார்க்கப்படுகிறார்.
35 வயதிற்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் துஷாரா தனுஷின் தங்கையாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் நடைபெற்று . அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய துஷாரா ” என்னுடைய 35 வயதிற்கு மேல் நான் சினிமாவில் இருந்து விலகி விடுவேன். அதற்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். 35 வயதிற்கு மேல் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்துள்ளார். சினிமாவுக்கு வந்த ஐந்தே ஆண்டுகளில் ஓரளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வருகிறார் துஷாரா விஜயன்.
இப்படியான நிலையில் அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு 26 வயதாகும் நிலையில் இன்னும் பத்து ஆண்டுகள் மட்டுமே அவர் சினிமாவில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்
ராயன்
தனுஷின் 50-வது படமாக உருவாகியிருக்கிறது ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க : தமிழ் சினிமாவின் தனி அடையாளம்! இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு 94வது பிறந்தநாள்!