Vadivelu: ”யார் செத்தாலும் வரமாட்டாரு” : போண்டா மணி இறப்புக்கு செல்லாத வடிவேலு.. கிளம்பும் எதிர்ப்பு
Bonda Mani : தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்தவர் கேத்தீஸ்வரன், 1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு செல்லாத நடிகர் வடிவேலுக்கு திரைத்துறையினர், இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்டு தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்தவர் கேத்தீஸ்வரன். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். தன்னுடைய பெயரையும் ‘போண்டா மணி’யாக மாற்றிக் கொண்டார். இவர் கவுண்டமணி, வடிவேலு, விவேக்கின் காமெடி காட்சிகளில் துணை நடிகராக அசத்தியிருப்பார்.
நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், படிக்காதவன், மருதமலை. வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த ஓராண்டாகவே இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த போண்டா மணி நேற்று முன்தினம் திடீரென வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வரும் வழியிலேயே போண்டா மணி உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது மறைவு திரைத்துறையினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. போண்டா மணி மறைவுக்கு ஏராளமான துணை நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் போண்டா மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் நடிகர் வடிவேலு போண்டா மணி இறப்புக்கு வராதது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கமாக சுக, துக்க நிகழ்வுகள் பங்கேற்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்ற நிலையில் தன்னுடன் இருந்த எந்த துணை காமெடி நடிகர் இறப்பு அல்லது பிரபலங்கள் மறைவுக்கு வடிவேலு செல்லாதது மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக போண்டா மணி இறப்புக்கு வந்த நடிகர் ‘சாரபாம்பு’ சுப்புராஜீடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நீங்கள் இதை வடிவேலுவிடம் தான் கேட்க வேண்டும். வடிவேலு யார் செத்தாலும் போக மாட்டார். விவேக், மனோ பாலா, நெல்லை சிவா, அல்வா வாசு, கிருஷ்ண மூர்த்தி என யார் இறந்தாலும் வடிவேலு செல்லவில்லை. அவரோடு நடிச்ச எங்களோட இறப்புக்கும் அவர் போகமாட்டார். அவர் போகும்போது யார் போகப்போறாருன்னு தெரியல. வடிவேலு கல்யாணம், இறப்பு என எதுக்குமே போகமாட்டார்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Actress Kavitha: ‘உன்னை எம்.எல்.ஏ., ஆக்குறேன்’ .. ஏமாற்றிய சந்திரபாபு நாயுடு.. நடிகை கவிதா சொன்ன அதிர்ச்சி தகவல்