Actress Kavitha: “உன்னை எம்.எல்.ஏ., ஆக்குறேன்” .. ஏமாற்றிய சந்திரபாபு நாயுடு.. நடிகை கவிதா சொன்ன அதிர்ச்சி தகவல்
நானும், ஜெயசுதாவும் காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக யாரோ சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அப்போது அரசியலே தெரியாது.
எம்.எல்.ஏ., சீட்டு கொடுப்பதாக சொல்லி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றிய சம்பவத்தை நடிகை கவிதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசும் கவிதா, “நானும், ஜெயசுதாவும் காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக யாரோ சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அப்போது அரசியலே தெரியாது. ஆனால் ராமராவ் இருக்கும்போதே தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துவிட்டார். அது எப்படி காங்கிரஸில் சேர்வார் என கூறி என்னை அழைத்து வர சொன்னார். என் வீட்டுக்கு 4,5 எம்.எல்.ஏ.,க்கள் வந்து சந்திரபாபு நாயுடு சந்திக்க வேண்டும் என சொல்லி நடந்ததை தெரிவித்தார்கள். ஆனால் என் கணவர், ‘யார் அப்படி சொன்னது? என கேட்டார். ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் சொன்னதற்காக நான் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.
நான் ஹீரோயினாக சென்னையில் இருக்கும்போது சந்திரபாபு நாயுடு என் பக்கத்து வீட்டில் இருந்ததால் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இரண்டு குடும்பத்துக்கு நல்லுறவு இருந்தது. அப்போது என்னிடம், ‘காங்கிரஸ் கட்சிக்கு எப்படி போவீர்கள்?’ என கேட்டார். உடனே நான், ‘நான் எந்த கட்சியிலும் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்’ என கூறினேன். அவரோ, தெலுங்கு தேசம் கட்சியில் நீங்கள் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ., சீட்டு கொடுக்கிறேன். பெண் பிரபலம் மற்றும் நீங்கள் சார்ந்திருக்கும் சமூகம் என அனைத்தையும் நான் ஆதரித்தது போல இருக்கும் என சந்திரபாபு நாயுடு சொன்னார்.
என் கணவர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். ஆனால் கவிதா நல்ல திறமையானவர், நான் பார்த்துக் கொள்கிறேன் என உறுதியளித்து எம்.எல்.ஏ.வாக மாற்றுகிறேன் என சொன்னதால் மறுநாள் நான் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தேன். அப்போது ஆந்திரா, தெலுங்கானா இரண்டு ஒன்றாக இருந்தது. என்னை விசாகப்பட்டினம் தெற்கில் வேட்பாளராக நிறுத்தினார். அங்கே போய் வீடு, ஆபீஸ் எல்லாம் எடுத்து நிறைய பணம் செலவழித்தேன். என் கணவர் மதுரை மாவட்டத்தில் காண்ட்ராக்டில் சம்பாதித்த பணம் எல்லாம் செலவழித்தேன்.
வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் நானும், சந்திரபாபு நாயுடுவும் உட்கார்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த விசாகப்பட்டினம் எம்.பி., வந்து ஏதோ சொன்னார். என்னை 5 நிமிடம் வெளியே காத்திருக்க சொன்னார். நான் என்னால் முடியாது என சொல்லிவிட்டேன். நான் போகிறேன் என சொல்லிவிட்டேன். நீங்கள் எனக்கு எம்.எல்.ஏ. சீட் தர மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் போறேன்னு சொல்லிட்டு அரசியலுக்கு குட் பை சொன்னேன்.
நான் திரும்பவும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்தேன். பிரதமர் மோடி மீதான ஈர்ப்பால் மறைமுகமாக சப்போர்ட் செய்ய நினைத்தேனே தவிர நேரடியாக களம் காண நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.