ஆபரேஷன் சிந்தூர் டைட்டில் எங்களுக்குதான்...போரை வைத்து கல்லா கட்ட தொடங்கிய பாலிவுட்
ஆப்ரேஷன் சிந்தூர் இந்திய நாட்டு மக்களிடம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பெயரின் காப்புரிமையை கைபற்ற கடும் போட்டி நிலவி வருகிறது

ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை நேற்று அதிகாலை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் ஆதரவு
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தஞ்சம் புகுந்துள்ள தீவிரவாதிகள் மீது இந்தியர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். அப்பாவி மக்களின் உயிரை கொன்ற தீவிரவாதிகளுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என்பதே பல முக்கிய பிரமுகர்கள் முதல் சாமானியர்களின் கருத்தாகவும் இருந்தது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள். சாமானியர்கள் மட்டுமின்றி ரஜினி , சிவகார்த்திகேயன் , விஜய் , தனுஷ் , கமல் மற்றும் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலர் இந்திய அரசின் இந்த தாக்குதலை பாராட்டினர். குங்குமத்தை குறிக்கும் சிந்தூர் என்கிற பெயர் பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கான காப்புரிமையை கைபற்ற பாலிவு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரை படமாக எடுக்க தயாரிப்பாளர் தீவிரம்

போரை மையப்படுத்தியும் தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாகவும் பல படங்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு நடத்திய உரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை மையப்படுத்தி இந்தியில் வெளியான படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. அந்த வகையில் தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் என்கிற டைட்டிலை தங்களது படத்திற்காக கைபற்ற பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. மக்களிடம் ஆப்ரேஷன் சிந்தூர் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த தாக்குதலை வைத்து படம் வெளியானால் நிச்சயம நல்லா கல்லா கட்டலாம் என்பதை யூகித்து தயாரிப்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பிழிய பிழிய தேசப்பற்று ஊறும் ஒரு படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.





















