சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் சரியான மரியாதை செய்யவில்லை: ஆதங்கப்பட்ட பாரதிராஜா
சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொதுச்சொத்து என தெரிவித்தார். மேலும் நான் சொல்லும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என உச்சரிக்க சொல்லிக் கொடுத்தவர் அவர் தான் என பாரதிராஜா பேசினார்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் சரியான மரியாதையை செய்யவில்லை என இயக்குநர் பாரதிராஜா ஆதங்கப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் வளரி ஸ்டூடியோ சார்பில் முனைவர் கா.வே.ச.மருது மோகன் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் சிவாஜியின் மகன்களும் நடிகர்களுமான ராம்குமார், பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிவாஜி இந்த நாட்டின் பொதுச்சொத்து
இந்நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொதுச்சொத்து என தெரிவித்தார். மேலும் நான் சொல்லும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என உச்சரிக்க சொல்லிக் கொடுத்தவர் அவர் தான் என்றும், இன்று பாரதிராஜா இயக்குநராக பேசுகிறார் என்றால் அது சிவாஜி போட்ட பிச்சை என நெகிழ்ச்சியாக கூறினார். தமிழை, வசனங்களை ஏற்ற, இறக்கமாக பேச கற்றுக் கொடுத்தவர். உலகத்தின் உள்ள எல்லா தமிழர் வீடுகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும்.
சிவாஜி வீடு ஒரு பல்கலைக்கழகம். அவர் இந்த நாட்டின் பொதுச்சொத்து. அவருக்கான சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை. சிவாஜியிடம் அரசியல் வேண்டாம் என சொன்னேன் என்று பாரதிராஜா கூறினார்.
கண் கலங்கிய இளையராஜா
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, நாங்கள் மரியாதையோடு வியந்து பார்த்த மனிதர் சிவாஜி என்றும், அவர் ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும்போது உள்ளே வரலாமா என என்னிடம் அனுமதி கேட்டார். அதைப் பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது என நினைவுகளைப் பகிர்ந்தார். மேலும் நேரம் தவறாமை சிவாஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சாப்பிடும் அரிசியில் சிவாஜியின் பெயர் இருக்கிறது எனவும் இளையராஜா தெரிவித்தார்.
சிவாஜிக்கு திரையுலகில் பாராட்டு விழா நடைபெற்ற போது அவருக்குப் பரிசாக கொடுக்கப்பட்ட சிலைக்கு முழு பணத்தையும் நான் தான் அளித்தேன். அதனை தெரிந்துக் கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்துவிட்டான் என்றால் அது நான் தான் என இளையராஜா கண்கலங்கியபடி கூறினார்.
பாக்யராஜின் புகழாரம்
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், சிவாஜி படங்களை பார்த்து விட்டு அழுதுள்ளேன். திரையில் அவர் அழ தொடங்குவதற்கு முன் நான் அழுது விடுவேன். ஒருமுறையாவது பார்க்க முடியுமா என நினைத்தவரை தாவணிக்கனவுகள் படத்தில் நடிக்க வைத்தேன். அவரைப் போல பாடல்களுக்கு லிப் மொமன்ட் கொடுக்க முடியாது என புகழாரம் சூட்டினார்.